எஸ்.பி.வேலுமணி விசுவாசிகளை தட்டித்தூக்கும் செந்தில் பாலாஜி!! கொங்கு மண்டலத்தில் களேபரம்!!!

By Ganesh RamachandranFirst Published Nov 8, 2021, 4:42 PM IST
Highlights

தமிழகத்தின் மற்ற பகுதிகளை தன்வசப்படுத்திய திமுக, கொங்கு மண்டலத்தை கைப்பற்ற இன்னும் போராடி வருகிறது. அதிமுகவின் கோட்டையாகப் பார்க்கப்படும் கொங்கு மண்டலத்தில் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக தலைவர்களின் விசுவாசிகளை திமுகவுக்கு தட்டித்தூக்கி அதகளப்படுத்தி வருகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

திமுகவின் கொங்கு மண்டல தளபதியாகவே செயல்படத் தொடங்கிவிட்டார் மின்சாரத் துறை செந்தில் பாலாஜி. எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய கொங்கு மண்டல முன்னாள் அதிமுக அமைச்சர்களை கட்டம் கட்டுவதும், அவர்களது ஆதரவாளர்களை திமுகவுக்கு இழுப்பதும் அவர்தான் என்று பரபரப்பாக பேசத்தொடங்கிவிட்டது கட்சி வட்டாரங்கள். குறிப்பாக எஸ்.பி.வேலுமணிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் தேர்தல் சமயத்திலேயே கடும் வார்த்தைப் போர் இருந்துவந்ததாலும், வேலுமணியை வீழ்த்துவது கொங்கு மண்டலத்தில் திமுகவை நிலைநிறுத்த பெரும் உதவி புரியும் என்பதாலும், வேலுமணி முக்கிய டார்கெட்டாகியுள்ளார்.

அதிமுக கூடாரத்தை காலி செய்து, விசுவாசிகளை திமுகவுக்கு இழுப்பதில் கவனமாகவும் கச்சிதமாகவும் செயல்படுகிறார் செந்தில் பாலாஜி. முக்கியமாக எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்களை நோக்கி அதிகம் காய்நகர்த்தப்படுவதாக தெரிகிறது. வேலுமணி இதன் மூலம் பலவீனப்படுவார் என்பதோடு மட்டுமில்லாமல், அவர் மீது போடப்பட்டுள்ள வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு உள்ளிட்ட பல ஊழல் வழக்குகளுக்கும் இதன் மூலம் பலம் கிடைக்கும் என்பது மாஸ்டர் பிளான். செந்தில் பாலாஜியின் இந்த திட்டத்தால் எஸ்.பி.வேலுமணி பதறிப்போயிருப்பதாக சொல்கிறார்கள் தொண்டாமுத்தூர்க்காரர்கள்.

அண்மையில் கூட, கோவை தெற்கு மாவட்டம் குறும்பபாளையம் ஊராட்சி மன்றத் தலைவி சாந்தி நாகராஜன், வார்டு உறுப்பினர் பஞ்சாள் நாகராஜ் உள்ளிட்டோர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இவர்களும் எஸ்.பி.வேலுமணியின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தவர்களே. இவர்களைப் போல புதிதாக் திமுகவில் இணைந்தவர்களுக்கு, அவரவர் பகுதிகளில் அதிமுகவை காலி செய்வதே முக்கியப் பணியாக கொடுக்கப்பட்டுள்ளதாம். களத்தில் நிற்கும் லோக்கல் தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரையில் திமுகவுக்கு இழுப்பதை இவர்கள் உறுதிப்படுத்துவார்கள் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

ஒரு பக்கம் எஸ்.பி.வேலுமணியை அட்டாக் செய்வதைப் போலவே, தன் சொந்தத் தொகுதிகளான அரவக்குறிச்சி, கரூர் பகுதிகளில் பலத்தோடு இருக்கும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரையும் பலவீனப்படுத்தி வருகிறார் செந்தில் பாலாஜி. அடுத்தடுத்து விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களும் திமுக பக்கம் சாய்ந்து வருகிறார்கள். எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வலது கரமாகப் பார்க்கப்பட்ட கரூர் வடக்கு அதிமுக நகர செயலாளர் பாண்டியன், செந்தில் பாலாஜியின் ஏற்பாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வலதுகரமாக கரூர் அதிமுகவின் அனைத்தும் அறிந்த பாண்டியன் திமுகவில் இணைந்தது கொங்கு மண்டலத்தில் அதிமுகவினரை கலக்கமடையச் செய்துள்ளது.

இப்படி திமுகவிற்கு செந்தில் பாலாஜியால் கொண்டுவரப்பட்ட இரண்டாம் கட்டத் தலைவர்கள் அனைவரும் வரும் நகராட்சித் தேர்தலிலேயே கெத்து காட்டி அதிமுகவை காலி செய்யும் பணியை தொடங்கிவிடுவார்கள் என்று கூறுகிறார்கள். தற்போதுள்ள சூழ்நிலையில் தங்கள் ஆதரவாளர்களை தங்களோடு தக்க வைப்பதே எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோருக்கு பெரும் சவாலாகிவிட்டது. மேலும் இதன் மூலம் செந்தில் பாலாஜி கொங்கு மண்டலத்தின் அதிக செல்வாக்கு மிக்க தலைவராக வளர்வதையும் கலக்கத்தோடு கவனித்து வருகின்றனர் கொங்கு மண்டல அதிமுகவினர்.

click me!