39 கோடி ரூபாயில் 2.21 ஏக்கரில் கருணாநிதிக்கு நினைவிடம்… ஆணை பிறப்பித்தது தமிழக அரசு!!

By Narendran SFirst Published Nov 8, 2021, 3:44 PM IST
Highlights

2.21 ஏக்கரில் ரூ.39 கோடியில் கலைஞர் கருணாநிதி நினைவிடம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வௌியிட்டுள்ளது. 

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிட வளாகத்தில், கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட  இடத்தில் ரூ.39 கோடி செலவில், 2.23 ஏக்கரில்  நினைவிடம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் தற்போது அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதை அடுத்து அவரது உடன் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தது. அப்போது சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்றப் பேரவை விதி எண் 110ன் கீழ் திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என தெரிவித்தார். முன்னதாக மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிட வளாகத்தில், கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட  இடத்தில் ரூ.39 கோடி செலவில், 2.23 ஏக்கரில்  நினைவிடம் அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு சட்டப்பேரவையில் எதிர்கட்சித் துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர்.

இதை அடுத்து கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களுடன் நினைவிடம் கட்டப்பட உள்ளதாகவும் தமிழகத்தின் முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகித்த கலைஞர் கருணாநிதிக்கு சென்னையில் நினைவிடம் கட்டப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும் கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் நிரந்தர தலைப்புச் செய்தியாக இருந்தவர் கலைஞர் கருணாநிதி என்றும் 70 ஆண்டுகளாக பத்திரிகையாளராக இருந்தவர் என்றும் புகழாரம் சூட்டிய மு.க.ஸ்டாலின், போட்டியிட்ட தேர்தலில் எல்லாம் வென்றவர் என்றும் தோல்வி அவரைத் தொட்டதே இல்லை, வெற்றி அவரைக் கைவிட்டதேயில்லை என்றும் தெரிவித்தார். தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடியவர். கல்வி, சமூக பொருளாதாரத்தில் தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு சென்றவர். இந்திய அரசியலை வழிநடத்திய ஞானி என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மேலும் கலைஞர் ஆற்றிய அரும்பணிகளை போற்றும் விதமாக, அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை மக்களும், வருங்காலத் தலைமுறையும் அறியக்கூடிய வகையில், நவீன விளக்கப்படங்களுடன் சென்னை, காமராஜர் சாலை, அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 39 கோடி மதிப்பீட்டில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிடம் அமைப்பதற்கான அரசாணை வௌியிடப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீடு தயாரானதால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் நினைவிடப்பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அமைக்கப்படவுள்ள நினைவிடத்தின் மாதிரி வரைபடம் வெளியிடப்பட்டது. அதில், உதயசூரியன் வடிவில் கருணாநிதி நினைவிடமும், முகப்பில் பிரம்மாண்டமான பேனா வடிவிலான தூணும் இடம்பெற்றிருந்தன.

click me!