எம்எல்ஏ வீட்டுக்கே இந்த கதியா? வேளச்சேரி பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ட அசன் மவுலானா..!

By vinoth kumarFirst Published Nov 8, 2021, 2:15 PM IST
Highlights

தனது வீடே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளதாகவும் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதில் தாமதம் ஏற்பட்டதாக எம்எல்ஏ அசன் மவுலானா தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

வேளச்சேரியில் வெள்ள பாதிப்புகள் மிக மோசமாக உள்ள நிலையில் அதை பார்வையிட கூட அத்தொகுதி எம்எல்ஏ வரவில்லை என்று பொதுமக்கள் மனகுமுறல்களை வெளிப்படுத்தி வந்த நிலையில் அவர்களிடம் அசன் மவுலானா மன்னிப்பு கேட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

குறிப்பாக சென்னையில் மழை என்றாலே தென் சென்னையில் உள்ள வேளச்சேரி, மடிப்பாக்கம், விஜயநகர், கல்கிநகர், பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்படுவது வழக்கமான ஒன்றாகவே இருந்து வருகிறது. கடந்த 2015ம் ஆண்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது இங்குள்ள பெரும்பாலான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இருசக்கர வாகனங்கள் தொடங்கி கார்கள் வரை அனைத்தும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. வேளச்சேரியில் இந்த முறையும் நிலைமை மாறவில்லை. வேளச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில் இடுப்பளவிற்கு மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த முறை உஷாரான கார் உரிமையாளர்கள் வேளச்சேரி மேம்பாலத்தின் மீது கார்களை பத்திரமாக வரிசை கட்டி நிறுத்தியுள்ளனர்.

வேளச்சேரி எவ்வளவு மோசமான பாதிப்பு இருந்து வரும் நிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் எங்கே என்ற கேள்வி அனைவரும் மத்தியில் எழுந்தது. சமூக வளைதலங்களில் பல்வேறு விமர்சனங்களும் செய்யப்பட்டன. இந்நிலையில் தனது வீடே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளதாகவும் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதில் தாமதம் ஏற்பட்டதாக எம்எல்ஏ அசன் மவுலானா தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். 

இது தொடர்பாக வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ அசன் மவுலானா;- வேளச்சேரி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். முதலில் எனது வீட்டின் நிலைமையைச் சரி செய்ய வேண்டும். மீட்பு நடவடிக்கைகளுக்காக வேளச்சேரிக்கு வருவதற்கு முன்பு எனது குடும்பத்தை வேறு பாதுகாப்பான வீட்டிற்கு மாற்றினேன் என பதிவிட்டுள்ளார். வேளச்சேரியில் வெள்ள பாதிப்புகள் மோசமாக உள்ள நிலையில், ஒரு எம்எல்ஏ வீட்டிலும் வெள்ளநீர் புகுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!