
போக்குவரத்து தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றும், தற்காலிக ஊழியர்களைக் கொண்டு பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்களுக்கு விபரீதம் ஏற்படலாம் என்றும் சிஐடியு சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நேற்று மீண்டும் குரோம்பேட்டையில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஊழியர்கள் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இப்போது முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கிவிட்டதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்துத் தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் இன்று குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பேருந்து சேவை இல்லாத காரணத்தால், மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்களை நாடி செல்கின்றனர். ஆனாலும், ஆட்டோக்கள் மற்றும் தனியார் வாகனங்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளன. திருவள்ளூரில் 25 அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் 11 பணிமனைகளில் 40 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. திருத்தணியில் 10 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.
இந்த நிலையில், சிஐடியூ சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது போக்குவரத்து தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும என்று கூறினார். போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தற்போது வெற்றிகரமாக நடைபெற்று கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். ஆளும் கட்சியினரை வைத்து பேருந்துகளை ஓட்டுவதுபோல் கணக்கு காட்டுகிறார்கள். ஆனால் 95 சதவீத போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உண்மைக்க புறம்பாக கூறி வருகிறார் என்றார்.
தற்போது தற்காலிக ஓட்டுநர்களைக் கொண்டு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிகிறது. தற்காலிக ஒட்டுநர்களால் பொதுமக்களுக்கு விபரீதம் ஏற்படலாம் என்றார். பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களுக்கு வருத்தம் கூறிய சௌந்தர்ராஜன், மற்ற அரசு துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் மட்டுமே கேட்டுள்ளோம் என்றார். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டாலும் மற்ற துறையைக் காட்டிலும் போக்குவரதது துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறைவே என்றும் கூறினார்.
7 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவை தொகையைக் கொடுக்க 7 ஆண்டுகள் அவகாசம் கேட்கிறார்கள். நீதிமன்றம் இது குறித்து கேள்வி எழுப்பினால் எங்களது தரப்பு நியாயத்தை எடுத்துரைப்போம் என்றார். போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக தலையிட வேண்டும் என்றும் சௌந்தர்ராஜன் கூறினார்.