
10 % பேருந்துகள் கூட இயங்கவில்லை. ஒருசில பேருந்துகளை அங்குமிங்குமாக இயற்றி அரசு படம் காட்டுகிறது என சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்த சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
13வது ஊதிய ஒப்பந்தத்தில் 2.57% ஊதிய உயர்வு கோரி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 2.44% என்ற ஊதிய உயர்வு வழங்குவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சில மறுத்துவிட்டன. சில சங்கங்கள் ஒப்புக்கொண்டன. ஆனால், வேலைநிறுத்தம் தொடர்ந்து வருவதால் மக்களும் பயணிகளும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மிகக்குறைவான பேருந்துகளே இயக்கப்படுவதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்குச் செல்வோர் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே பலகட்ட பேச்சுவார்த்தைகளில் எந்தவித முடிவும் எட்டப்படாத நிலையில், நேற்றைய பேச்சுவார்த்தையும் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில், தற்காலிக ஊழியர்களை கொண்டு பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. மீண்டும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படாது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்த சௌந்தரராஜன், அமைதியாக அறவழியில் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. எங்களது வேலைநிறுத்தத்தால் மக்கள் அவதிப்படுவதற்கு வருந்துகிறோம். ஆனால், இந்த நிலைக்கு காரணம் அரசுதான் என்பதை மக்கள் புரிந்துகொண்டு எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். மற்ற அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும். தற்போதைய அடிப்படை ஊதியத்தை 2.57 காரணி ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பிரச்னைக்கு தீர்வுகாண்பதை விடுத்து சட்டவிரோதமான அபாயகரமான முறையில் தற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்குவது மக்களுக்கு பாதுகாப்பானது அல்ல.
நேற்றைய தினம் போடப்பட்ட ஒப்பந்தம் முறையாக போடப்பட்டது அல்ல. அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக ஒப்பந்தம் போடவேண்டும். போக்குவரத்துத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை என தெரிவித்துள்ளார். எனவே முதல்வரே நேரடியாக தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
இல்லையெனில், போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். மற்ற தொழிலாளர் சங்கங்களையும் இணைத்துக்கொண்டு போராட்டத்தை தீவிரப்படுத்தி அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என சௌந்தரராஜன் தெரிவித்தார்.