மீண்டும் ஊரடங்கா? தமிழகம் முழுவதும் கோவில்கள் திடீர் மூடல்.. பக்தர்கள் ஏமாற்றம்..!

By vinoth kumarFirst Published Aug 1, 2021, 12:53 PM IST
Highlights

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் சுவாமி தரிசனம் செய்யப் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. 

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து  முக்கிய கோவில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் சுவாமி தரிசனம் செய்யப் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடி பெருவிழாவை முன்னிட்டு கோவில்களுக்குப் பக்தர்கள் அதிகளவு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பதால் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு 3 நாட்கள் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் கூறியுள்ளனர்.

* சென்னையில் வடபழனி முருகன் கோவில், கந்த கோட்டம் கந்தசாமி கோவில், சூளை அங்காள பரமேஸ்வரி கோவில், பாடி படைவீட்டம்மன் கோவில், வில்லிவாக்கம் தேவி பாலியம்மன் ஆகிய கோவில்களில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 9ம் தேதி வரை பக்தர்கள் வழிபட அனுமதியில்லை.

* திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், படைவீடு ரேணுகாம்பாள் கோயில் மற்றும் முருகன் கோயில்கள் உட்பட அனைத்து கோயில்களிலும் ஆடிக் கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்குச் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

* காஞ்சிபுரத்தில் முக்கிய புகழ் பெற்ற திருத்தலங்களான காஞ்சி ஏகாம்பரநாதர், காஞ்சி காமாட்சி அம்மன், வரதராஜபெருமாள் திருக்கோயில் உள்ளிட்ட அதிகளவில் பக்தர்கள் கூடும் திருக்கோவில்களிலும் மூன்று நாளைக்கு தரிசனம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், அழகர் கோயில், பழமுதிர்சோலை முருகன் கோயில் மற்றும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகிய கோயில்களில் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் ஆடிக் கிருத்திகை நிகழ்வுகள் அனைத்திற்கும் அர்ச்சகர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்,

* திருத்தணி முருகன் கோயிலில் ஜூலை 31 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்யப் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் கோயில் குளத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் தெப்ப உற்சவ விழா நடப்பாண்டு நடைபெறாது என்றும் கோயில் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். 

* கோவையில் வரும் 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை மருதமலை, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் ஆகியவற்றில் பொதுமக்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

* திருச்சியில் மலைக்கோட்டை, திருவரங்கம், சமயபுரம், உறையூர் வெக்காளியம்மன் உள்ளிட்ட கோவில்களில் 2 மற்றம் 3ம் தேதிகளில் பக்தர்கள் கூரிபட அனுமதியில்லை. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் சென்னையில் உள்ள அனைத்து கோயில்கள் உட்பட தமிழகம் முழுவதும் முக்கிய மற்றும் பிரசித்தி பெற்ற கோயில்கள் மூடப்பட்டுள்ளதால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தபோகிறார்களா என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

click me!