திமுக ஆட்சியில்தான் கோயில் மேம்பாடு அடையும்.. எங்க ஓட்டு அந்தக் கட்சிக்கே.. பூசாரிகள் நலச் சங்கம் அதிரடி!

By Asianet TamilFirst Published Oct 4, 2021, 9:17 AM IST
Highlights

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தமிழக கோயில் பூசாரிகள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.
 

இச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.வாசு திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கோயில் பூசாரிகளுக்காக பல்வேறு நலத் திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. இதற்காக முதல்வருக்கு மாவட்டந்தோறும் நன்றி அறிவிப்புக் கூட்டத்தை நடத்தி வருகிறோம். விரைவில் முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளோம். கருணாநிதி முதல்வராக இருந்தபோது கிராமக் கோயில் பூசாரிகள் நலவாரியத்தை அமைத்தார். அதில், 69 ஆயிரம் பேர் உறுப்பினர்கள் ஆனார்கள்.
அந்த நலவாரியத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று முந்தைய அதிமுக அரசிடம் 10 ஆண்டுகளாக எடுத்துச் சொன்னோம். ஆனால், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலவாரியம் என்ற ஒரே காரணத்துக்காகப் புறக்கணித்தார்கள். இதனால், ஒரு பூசாரிக்குக்கூட நலவாரியப் பயன்கள் கிடைக்கவில்லை. பூசாரிகளுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை அதிமுக அரசு மதிக்கவில்லை. ஆனால், பூசாரிகளுக்கான நலத்திட்டங்களைத் தனது தேர்தல் அறிக்கையில் திமுக தெரிவித்ததுடன், அவற்றை ஒரே வாரத்தில் செயல்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது.
அதேபோல், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் வரவேற்புக்குரிய மிக அற்புதமான திட்டம். பூசாரிகளுக்குப் பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்ந்து கிடைக்க, ஒன்பது மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டும். திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று எங்கள் அமைப்பிம் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். உள்ளாட்சி அமைப்புகளில் திமுக ஆட்சி அமைவதன் மூலம் கிராமப்புறக் கோயில் பூஜைகள் சிறப்பாக நடைபெறும். கோயில்களும் மேம்பாடு அடையும். எனவே, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வாக்களிக்க முடிவு செய்துள்ளோம்” என்று பி.வாசு தெரிவித்தார்.

click me!