
மகாபாரதக் காலத்திலேயே, டிவி, லைவ்டெலிகாஸ்ட் எனப்படும் நேரடி ஒளிபரப்பு எல்லாம் இருந்தது என்று உத்தரப்பிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா கதையளந்துள்ளார்.
‘இந்தி பத்திரிகையாளர்’ தினத்தை முன்னிட்டு, உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தினேஷ் சர்மா பேசியுள்ளார். அப்போதுதான் இவ்வாறு பேசி சிரிப்புக் காட்டியுள்ளார்.
அஸ்தினாபுரத்தில் அமர்ந்தபடி, போரின்போது பறவையின் பார்வையின் வழியே போர் நடப்பதை, திருதராஷ்ட்டிரனுக்கு சஞ்சயன் விவரித்த காலத்திலிருந்தே ஊடகத்துறை இருப்பதாகவும், நேரலை இல்லாமல் இருந்திருந்தால் சஞ்சயனால் எவ்வாறு போர்க்காட்சிகளை விளக்கி இருக்கமுடியும் என்றும் தினேஷ் சர்மா கேட்டுள்ளார்.
மேலும், ‘கூகுள் எல்லாம் இப்போதுவந்த தொழில்நுட்பம்; ஆனால் நாரதர் அந்தகாலத்திலேயே கூகுளாக செயல்பட்டவர் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
‘நாராயணா’ மந்திரம் ஓதியபடி ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செய்திகளை சேர்க்கக் கூடிய ரிப்போர்ட்டர்தான் நாரதர் என்றும் சிரிக்காமல் சர்மா பேசியுள்ளார்.
சேட்டிலைட், இண்டர்நெட், பிளாஸ்டிக் சர்ஜரி, புவி ஈர்ப்புத் தத்துவம் எல்லாம் மகாபாரதம், இராமாயணம் காலத்திலேயே இந்தியாவில் இருந்தது என்று பிரதமர் மோடிஉட்பட பாஜக தலைவர்கள் அத்தனை பேரும், பேச மைக் கிடைக்கும் போதெல்லாம் உளறுவது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையிலேயே உத்தரப்பிரதேச பாஜகதுணை முதல்வர் தினேஷ் சர்மாவும் தற்போதுஉளறிக் கொட்டியுள்ளார்