
எனக்கு மது ஆலைகள் கிடையாது என்றும் இருந்தால்தானே மூட முடியும் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன், சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணியின் பேச்சுக்கு பதில் சொல்ல டிடிவி தினகரன், சபாநாயகர் தனபாலிடம் அனுமதி கேட்டார். ஆனால், அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்துவிட்டார். இதையடுத்து, டிடிவி தினகரன் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
இதன் பின்னர், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அமைச்சர் தங்கமணியின் குற்றச்சாட்டுக்கு பதில்சொல்ல சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்ததால் வெளிநடப்பு செய்ததாக கூறினார். மூடிய மதுக்கடைகளை மீண்டும் அரசு திறக்க முயற்சிப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அரசியல் மேடைபோல் சட்டசபையில் அமைச்சர் பேசுகிறார். ஆணவத்தில், கோபத்தில் அமைச்சர்கள் பொய் பேசினால், பதில் சொல்ல சட்டமன்றத்தில் வாய்ப்பளிக்கவில்லை என்றால், வெளியே வந்து பேசுவோம்.
ஜெயலலிதா வழியில் மதுக்கடைகளைக் குறைப்போம் பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று சொல்லும் அரசாங்கம், 3866 கடைகளை குறைப்பதை விட்டுவிட்டு, மீண்டும் 810 கடைகள் திறக்கப்போகிறோம் என்று கூறுகிறார்கள். மூடிய மதுக்கடைகளை மீண்டும் அரசு திறக்க முயற்சிப்பது ஏன்.
எனக்கு எந்த சாராய ஆலையும் கிடையாது. நான், மனைவி என் குழந்தை மட்டும்தான் உள்ளனார். என் குடும்பத்தில் சாராய ஆலை யார் வைத்துள்ளார்கள் என்பது பற்றி எனக்குத் தெரியாது. என்னிடம் மது ஆலைகள் இருந்தால்தானே நான் மூட முடியும்.
ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன் நாங்கள் தரவில்லை. அப்படி நாங்கள் கொடுத்திருந்தால் அதை நிறைவேற்றுவோம். வீட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் மசூதுரனன் ஆதரவாளர்கள் கொடுத்தது அனைவருக்கும் தெரியும் என்றார்.