”அக்னிபத்” எதிராக பாஜக வை எதிர்க்கும் திமுக செய்வது மட்டும் நியாயமா..? போட்டு பொளந்த சீமான்..

By Thanalakshmi VFirst Published Jun 26, 2022, 2:08 PM IST
Highlights

நாட்டின் எதிர்காலமான மாணவச்செல்வங்களுக்கு அறிவும், ஒழுக்கமும், நற்பண்பும் போதித்து அறப்பணியாற்றும் ஆசிரிய பெருமக்களைத் தேர்வாணையத்தின் மூலம் நிரந்தரப் பணியாளர்களாக மட்டுமே தேர்வு செய்ய வேண்டுமெனவும், தற்காலிக ஆசிரியர் நியமன உத்தரவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சி ஒருங்கிணப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: " அரசுப்பள்ளி ஆசிரியர்களை தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தின் மூலம் நிரப்ப தமிழக அரசு முடிவு செய்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஆசிரியர் பணிக்காக இரவு பகல் பாராது முயற்சித்துக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களின் அரசுப்பணி கனவினை கானல் நீராக்கும் திமுக அரசின் இக்கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழகம் முழுவதுமுள்ள அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு மாதம் வெறும் ரூ 7500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நிரப்பும் தமிழக அரசின் அறிவிப்பு அப்பட்டமான உழைப்புச் சுரண்டல் மட்டுமின்றி அறிவுச்சுரண்டலுமாகும்.ஏற்கனவே, ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு பணியாளர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஆட்சிக்கு வந்தவுடன் நடைமுறைப்படுத்துவேன் என்று வாக்குறுதியளித்து ஏமாற்றி அவர்களின் வாக்கினை பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த திமுக அரசு செய்த பச்சைத் துரோகத்தால் ஆசிரியர்களது ஓய்வூதிய பலன் என்பது மிகச் சொற்பமாகக் குறைந்துபோயுள்ளது.

மேலும் படிக்க:குடும்பத்திற்காக சுயநலமாக செயல்பட்டார்.! டிடிவி தினகரனோடு ரகசிய பேச்சுநடத்தினார்..ஓபிஎஸ் மீது சீறிய உதயகுமார்

தற்போது மேலும் 13 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற தமிழக அரசின் புதிய அறிவிப்பால் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் என்ற ஒன்றே இல்லாமல் போகும் சூழல் ஏற்படும். ஏற்கனவே தமிழகத்தின் அனைத்து அரசுத்துறை அலுவலகங்களும் ஏறத்தாழ சரிபாதி அளவிற்கு எவ்வித அடிப்படை உரிமைகளோ, பணிப்பலன்களோ இல்லாமல் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களைக் கொண்டு இயங்கும் அவலநிலை நிலவிவருகிறது.

இந்நிலையில், மேலும் பல ஆயிரக்கணக்கான தற்காலிக ஆசிரியர்கள் பணிநியமனம் என்பது பள்ளிக் கல்வித்துறையில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். ஏற்கனவே இதேபோன்று ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட செவிலியர்கள் தற்போது பணிநிரந்தரம் வேண்டி வீதியில் இறங்கிப் போராடிவருவதால் அரசு மருத்துமனைகளில் அவ்வப்போது மருத்துவசேவை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே தற்காலிக ஆசிரியர் நியமனத்தால் எதிர்காலத்தில் பணி நிரந்தரப் போராட்டங்களுக்கு வழிவகுப்பதோடு, ஆசிரியர்களது மன உளைச்சலுக்கும், மாணவர்களின் கல்விப் பாதிக்கப்படவும் முக்கியக் காரணமாகவும் அமையும்.

மேலும் படிக்க:பேட்டி கொடுத்தால் வேட்டியை உருவி விட்ருவாங்க.. பேட்டியில் இருந்து எஸ்கேப் ஆன மதுரை ஆதீனம் !

மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு நாட்டின் பாதுகாப்பினைக் குழிதோண்டிப் புதைக்கும் விதமாக அக்னிபாதை என்ற பெயரில் தற்காலிக ராணுவ வீரர்களைப் பணி நியமனம் செய்யும் எதேச்சதிகாரச் செயலில் ஈடுபட்டுள்ளதை எதிர்ப்பதாகக் கூறும் திமுக அரசு, அதைவிட அதிமுக்கியமானதும், நாளைய தலைமுறையை உருவாக்க கூடியதுமான பள்ளிக்கல்வித்துறையில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்திருப்பது எவ்வகையில் நியாயமாகும்? இத்தகைய பணி நியமனங்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் முறைகேட்டில் ஈடுபடவும், ஊழல் புரியவுமே வாய்ப்பேற்படுத்தும்.

மேலும் படிக்க:ஓபிஎஸ் அணிக்கு திரும்பும் நிர்வாகிகள்..? பொதுக்குழுவில் நடைபெற்ற பிரச்சனைக்கு யார் காரணம்- வைத்தியலிங்கம்

ஆகவே, நாட்டின் எதிர்காலமான மாணவச்செல்வங்களுக்கு அறிவும், ஒழுக்கமும், நற்பண்பும் போதித்து அறப்பணியாற்றும் ஆசிரிய பெருமக்களைத் தேர்வாணையத்தின் மூலம் நிரந்தரப் பணியாளர்களாக மட்டுமே தேர்வு செய்ய வேண்டுமெனவும், தற்காலிக ஆசிரியர் நியமன உத்தரவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமெனவும் தமிழக அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

 

click me!