கார்பரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகையை அள்ளிக்கொடுத்த மத்திய அரசு: நிர்மலா அறிவித்த சலுகை என்னவென்று தெரியுமா?

By Selvanayagam PFirst Published Sep 20, 2019, 11:10 PM IST
Highlights

பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையிலும், வேலைவாய்ப்பை உருவாக்கவும், முதலீட்டை கவரவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல்வேறு வரிச்சலுகைகளை அறிவித்துள்ளார்
 

கோவா தலைநகர் பனாஜியில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடப்பதற்கு சில மணிநேரத்துக்கு முன் இந்த வரிச்சலுகைகளை நிர்மலா சீதாராமன் அறிவித்தார்
நாட்டின் பொருளாதர வளர்ச்சிக் குறைவு ஏற்பட்டு, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி 5 சதவீதமாகக் குறைந்தது. ஆட்டோமொபைல் விற்பனை சரிந்தது, 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாயின்மை அதிகரித்தது முதலீடுகளும் வரவில்லை. இதையடுத்து, பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு சலுகைகளை நிதயமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில வாரங்களாக அறிவித்து வருகிறார்.

அந்த வகையில் பானாஜி நகரில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு முன்பாக நிர்மலா சீதாராமன் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார். அதன் விவரம் வருமாறு.

1. உள்நாட்டில் செயல்படும் நிறுவனங்களுக்கு செஸ் மற்றும் கூடுதல் வரி ஆகிய அனைத்தும் சேர்த்து கார்ப்பரேட் வரி 22 சதவீதமாகக் குறைப்படுகிறது. தற்போது 30 சதவீதம் இருந்தது. ஒட்டுமொத்த செஸ் மற்றும் கூடுதல் வரி ஆகியவை சேர்த்து கார்ப்பரேட் வரி 25.17 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இந்த வரி 34.94 சதவீதமாக இருந்தது. உள்நாட்டு கார்பரேட் நிறுவனங்கள் எந்தவிதமான வரிச்சலுகையும் கேட்காமல் இருந்தால் இது பொருந்தும். மேலும் எம்ஐடி எனப்படும் குறைந்தபட்ச மாற்றுவரியும் இந்நிறுவனங்கள் மீது விதிக்கப்படாது.

2. 2019-ம் ஆண்டு, அக்டோபர் 1-ம் தேதிக்கு பின் உற்பத்தியில் புதிதாக ஈடுபடும் நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 25 சதவீதமாக இருந்தது. அது 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. முழுமையான வரியாக 17 சதவீதம் மட்டும் செலுத்தினால் போதுமானது. இந்த அறிவிப்பு அனைத்தும் நடப்பு நிதியாண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதலே நடைமுறைக்கு வரும்.

3. எம்ஏடி எனப்படும் குறைந்தபட்ச மாற்று வரி 18.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்து விரைவில் அவசரச் சட்டமாக கொண்டுவரப்படும்.

4. நிறுவனங்கள் 22 சதவீத வருமான வரி செலுத்துபவையாக இருந்தால், அந்த நிறுவனங்கள் குறைந்தபட்ச மாற்றுவரி (MAT) செலுத்தத் தேவையில்லை .

5. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஒரு நிறுவனம் விற்பனை செய்யும் பங்குகள் மூலம் கிடைக்கும் தொகைக்கு கூடுதல் வரி விதிக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை.

6. பங்குச்சந்தை முதலீடுகள் மூலம் ஆதாயம் அடையும் முதலீட்டாளர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சூப்பர் ரிச் வரி விதிக்கப்படாது.

7. ஜூலை 5-ம் தேதிக்கு முன்பாகப் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் பங்குகளை வாங்கி இருந்தாலோ அல்லது விற்பனை செய்திருந்தாலோ சூப்பர் ரிச் வரி விதிக்கப்படாது.

8. நிறுவனங்கள் தங்களின் சமூகப் பொறுப்பு நிதியான 2 சதவீதத்தை ஐஐடி, என்ஐடி நிறுவனங்களில் ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்கும், தேசிய அளவிலான ஆய்வுக்கூடங்களுக்குச் செலவு செய்யலாம்.

9. இந்த வரிச்சலுகைகள் அனைத்தும் 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தை ஊக்கப்படுத்தும். வேலைவாய்ப்பை அதிகப்படுத்தி, பொருளாதார வளர்ச்சியைத் தூண்டிவிட்டு, வருவாயை உயர்த்தும் என்று நம்புகிறேன்.

10 இந்த அறிவிப்பால் இந்த நிதியாண்டில் கிடைக்க வேண்டிய ரூ.1.45 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்

11. இந்த வரிக்குறைப்பு மூலம் ஆசியாவிலும் உலகின் சில நாடுகளையும் ஒப்பிடும்போது இந்தியாவில் கார்ப்பரேட் வரி குறைவு என்றாகியுள்ளது, இதன் மூலம் முதலீடு அதிகரிக்கும் வேலை வாய்ப்புப் பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

12. கார்ப்பரேட் வரி மியான்மரில் 25%, மலேசியாவில் 24%, இந்தோனேசியா மற்றும் கொரியாவில் 25%, இலங்கையில் 28%. சீன நிறுவனங்கள் கூட 25% வரி செலுத்துகின்றன, பிரேசிலில் 34% வரி நடைமுறையில் உள்ளன. கார்ப்பரேட் வரியின் உலக சராசரி தற்போது 23.79%. ஆசிய கார்ப்பரேட் வரி சராசரி 21.09%.

13. 2003லிருந்து உலக அளவில் கார்ப்பரேட் வரிகள் குறைக்கப்பட்டு வந்துள்ள நிலையில் இந்தியாவில் 30% ஆக இருந்தது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த அதிரடி வரிக்குறைப்பு மூலம் இந்திய நிறுவனங்கள் உலக அளவில்  போட்டியிட முடியும்.

click me!