
டாஸ்மாக் ஊழியர்கள் ஊதியத்தை ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்க வலியுறுத்தி சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் மதுரை காளவாசலில் உண்ணாவிரதம் இருந்தனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். தொகுப்பூதியத்தை காலமுறை ஊதியமாக உயர்த்தி வழங்க வேண்டும், விடுமுறை வழங்க வேண்டும், பணிமூப்பு அடிப்படையில் பட்டியல் வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக பேசிய ஒருவர், 15 ஆண்டுகளாக பணிபுரிந்தும் தொகுப்பூதியம்தான் வழங்கப்படுகிறது. விடுமுறை உள்ளிட்ட எந்த அடிப்படை உரிமையும் சட்டப்படி வழங்கப்படவில்லை. பணிமூப்பு பட்டியல் கூட முறையாக வெளியிடப்படவில்லை. டாஸ்மாக் அலுவலகத்தில் வைத்தே ஊழியர்களிடம் லஞ்சம் பெற்று அதிகாரிகளுக்கு வழங்கும் புரோக்கர்கள் அதிகரித்துவிட்டனர்.
திருட்டு, கொள்ளை ஆகிய சம்பவங்கள் நடந்தால் டாஸ்மாக் ஊழியர்தான் பொறுப்பேற்க வேண்டும் என நிர்பந்திக்கின்றனர். 15 ஆண்டுகளாக பணியாற்றியவர்களுக்கு எந்தவிதமான சலுகையும் வழங்கப்படாததால் கடுமையாக வேதனையடைந்துள்ளோம் என டாஸ்மாக் ஊழியர் சங்க நிர்வாகி தெரிவித்தார்.
மாதம் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18000 வழங்க வேண்டும். பணியின்போது இறந்தால் வாரிசுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும் டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.