திமுக - பாஜக இணைந்திருப்பதை யார் முடிவு செய்தது தெரியுமா? திமுக மேடையில் அனல் பறக்க பேசிய தமிழிசை...

By sathish kFirst Published Aug 27, 2018, 11:27 AM IST
Highlights

திமுகவின் மேடையில் பாஜகவும், பாஜகவின் மேடையில் திமுகவும் இருப்பதை யார் முடிவு செய்தது என்றால் விண்ணுலகில் இருக்கும் கலைஞர் அவர்களும், வாஜ்பாய் அவர்களும்தான் என தமிழிசை நினைவேந்தல் நிகழ்ச்சியில் அனல் பறக்க பேசினார்.

மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞருக்கு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரில் உள்ள மைதானத்தில் நேற்று  நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. ‘அரசியல் ஆளுமை கலைஞர்’ என்ற தலைப்பில்  திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை  நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

இந்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது; நெஞ்சுக்கு நீதி எழுதி வா... குறளோவியம் எழுதி வா... பராசக்தி எழுதி வா... என்ற இந்தத் தொண்டர் கூட்டத்தின் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றியவர் கலைஞர். எழுந்து வா தலைவா... எழுந்து வா என்ற தொண்டர்களின் கோரிக்கையை மட்டும் நிறைவேற்ற முடியாமல் இன்று இரங்கல் கூட்டம் நடத்த வேண்டிய அவலநிலை ஏற்பட்டிருப்பதைக் கண்டு மனம் வருந்துகிறேன்.

நடத்த முடியாததையும், நடத்திக் காட்டியவர் கலைஞர். அதுதான் அவரின் ஆளுமை, ஏனெனில் அய்யா வீரமணியின் பக்கத்தில் தமிழிசையையும் உட்கார வைக்க முடியும் என்றால் அது கலைஞரால் மட்டுமே முடியும்.

அரசியலில் ஒருவர் ஆளுமையாக வர வேண்டும் என்றால் அவருக்கு மொழி ஆளுமை வேண்டும் நட்பாளுமைக் வேண்டும், சமயோசிதம் வேண்டும், இவையெல்லாம் கலந்த அரசியல் ஆளுமை வேண்டும். அந்த மொழி ஆளுமைதான் கலைஞரை ஓர் ஆளுமையாக மாற்றியிருக்கிறது. எந்தெந்த நேரத்தில் எந்த முடிவை எடுக்க வேண்டும் என்று தமிழகம் மட்டுமில்லாது இந்தியாவுக்கே ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தவர் கலைஞர்.

கலைஞர் தேசியக் கட்சியின் தலைவரும் அல்ல, நாடாளுமன்ற உறுப்பினரும் அல்ல, மேலவை உறுப்பினரும் அல்ல. ஆனால், கலைஞர் இறந்த உடன் ஏன் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது என என்னிடம் கேட்டார்கள். தேசியக் கொடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரால்தான் ஏற்றப்பட வேண்டும் என்ற உரிமையைப் பெற்று தந்தவர் கலைஞர். சாமானியராக இருந்து தலைவராக உயர்ந்த கலைஞருக்கு இரு அவைகளும் ஒத்திவைப்பது, டீக்கடை வைத்து சாமானியராக இருந்து இந்தியாவின் பிரதமரான ஒரு தலைவனால்தான் முடியும். உழைத்த உழைப்பும், கடினமான வாழ்க்கையை வாழ்ந்தவர்களுக்குத்தான் தெரியும். அருள் நிதியின் திருமணத்தில் பேசிய என் பேச்சை கேட்டு அப்பாவுக்கு மகள் தப்பாமல் பிறந்திருக்கிறாய் என்று என்னை வாழ்த்தினார்.

இப்போது என்னிடம் பாஜகவுக்கும், திமுகவுக்கும் என்ன தொடர்பு என்று சிலர் கேட்கிறார்கள், திமுகவின் மேடையில் பாஜகவும், பாஜகவின் மேடையில் திமுகவும் இருப்பதை யார் முடிவு செய்தது என்றால் விண்ணுலகில் இருக்கும் கலைஞர் அவர்களும், வாஜ்பாய் அவர்களும்தான். அரசியல் சலசலப்புக்கு அஞ்சக் கூடாது என்பதை தமிழகத்துக்குக் கற்றுக் கொடுத்தவர் கலைஞர். தோல்வியைச் சந்திக்காத தலைவர் கலைஞர். கலைஞரின் அரசியல் ஆளுமைக்கு ஒரு கோடி வணக்கங்களைத் தெரிவித்து கொள்கிறேன்.

click me!