ரெண்டு வயது குழந்தை போல தவழ்ந்து வந்த எடப்பாடி!! என் கையை பிடித்து கெஞ்சினார்.. விளாசும் தினகரன்

By karthikeyan VFirst Published Aug 27, 2018, 10:03 AM IST
Highlights

தன்னை குட்டி எதிரி என்று விமர்சித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளரும் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏவுமான தினகரன் பதிலடி கொடுத்துள்ளார்.
 

தன்னை குட்டி எதிரி என்று விமர்சித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளரும் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏவுமான தினகரன் பதிலடி கொடுத்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் பல பூகம்பங்கள் வெடித்தன; அதிரடியான மாற்றங்களும் நிகழ்ந்தன. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு முதல்வராக இருந்த ஓபிஎஸ், அப்பதவியை சசிகலா பெற முனைந்தபோது, போர்க்கொடி தூக்கினார். இதையடுத்து ஓபிஎஸுக்கு ஆதரவாக அவருடன் சில எம்.எல்.ஏக்களும் அதிமுக நிர்வாகிகளும் சென்றனர். அதன்பிறகும் எப்படியாவது முதல்வராகிவிட சசிகலா தயாரானபோது, சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்ததால் அவரால் முதல்வராக முடியவில்லை. ஆதலால், எடப்பாடி பழனிசாமி முதல்வரானார்.

அதன்பிறகு பன்னீர்செல்வம்-பழனிசாமி அணிகள் இடையே மோதல் நீடித்துவந்தது. இரு அணிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் நீண்ட இழுபறிக்கு பிறகு உடன்பாடு எட்டப்பட்டு, சசிகலா, தினகரன் மற்றும் அவர்களது குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டு பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் இணைந்து, அதிமுகவிற்கு கூட்டுத் தலைமை ஏற்று வழிநடத்திவருகின்றனர். 

இதையடுத்து அதிமுகவையும் இரட்டை இலை சின்னத்தையும் மீட்பதே தனது இலக்கு என்று கூறி அதிரடியாக செயல்பட்ட தினகரன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அபார வெற்றி பெற்றார். அந்த வெற்றி கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். 

இப்போதும் ஆட்சியாளர்களும் தினகரனும் பரஸ்பரம் விமர்சித்துக்கொள்வது தொடர்ந்துவருகிறது. ஆட்சியாளர்கள் சார்பில், தினகரன் ஒரு பொருட்டே இல்லை என்பதுபோல விமர்சித்துவருகின்றனர். அதற்கு தினகரனும் பதிலடி கொடுத்து வருகிறார். தினகரன் அமைப்பை வலுப்படுத்தும் விதமாகவும் தனது பலத்தை காட்டும் விதமாகவும் மாவட்ட வாரியாக பொதுக்கூட்டங்களை நடத்திவருகிறார். 

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், தன்னை குட்டி எதிரி என்று விமர்சித்த முதல்வர் பழனிசாமியின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்தார் தினகரன். 

அப்போது பேசிய தினகரன், முதல்வர் பழனிசாமி என்னவோ வானத்திலிருந்து குதித்தாற்போல பேசுகிறார். 2017ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி சசிகலா முதல்வராக முடியாமல் போனபோது, நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சசிகலா சொன்னதால்தான் எடப்பாடி பழனிசாமி முதல்வராக அனைவரும் ஒப்புக்கொண்டனர். அப்போது மேடையில் 2 வயது குழந்தை மண்டியிட்டு வருவதுபோல வந்து பாதம் தொட்டு வணங்கினீர்கள். முதல்வராக பழனிசாமியை தேர்ந்தெடுத்திருப்பதை அனைவரிடமும் சொல்லலாம் என்று நான் கூறியபோது, அவரை முதல்வராக அறிவித்தால் பலர் கையெழுத்து போடமாட்டார்கள் என்பதால் சொல்ல வேண்டாம் என்று எனது கையை பிடித்து கெஞ்சினார். 

அன்று என் கையை பிடித்து கெஞ்சிய பழனிசாமி, இன்று என்னை குட்டி எதிரி என்கிறார். ஆமாம்.. நான் குட்டி எதிரிதான். அம்மாவின்(ஜெயலலிதா) குட்டி நான். அம்மா 8 அடி பாய்ந்தால், நான் 16 அடி அல்ல.. 16 ஆயிரம் அடி பாய்வேன் என தினகரன் விளாசினார். மேலும் தன்னை பார்த்து பயப்படவில்லை என்றால், தங்களது கூட்டத்திற்கு அனுமதி மறுப்பது ஏன்? என கேள்வியும் எழுப்பினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகிய மூன்று கொங்கு மண்டல அமைச்சர்களாலும் அவர்கள் உறவினர்களுக்குத்தான் ஆதாயமே தவிர மக்களுக்கு அவர்கள் எதையும் செய்ததில்லை என விமர்சித்த தினகரன், அவர்களை நம்பி நாங்கள் ஏமாந்ததுபோல கொங்கு மண்டல மக்கள் ஏமாறமாட்டார்கள் என தெரிவித்தார்.

click me!