
தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படாது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 192 டி.எம்.சி நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், கர்நாடகா திறந்துவிட வேண்டிய நீரை திறந்துவிடுவதே இல்லை. இந்த ஆண்டுக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டிய மீதமுள்ள நீரை திறந்துவிடுமாறு தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
ஆனால், காவிரி நீரை திறக்க முடியாது கர்நாடக முதல்வரும் நீர்வளத்துறை அமைச்சரும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.
இதனால், டெல்டா மாவட்ட பயிர்கள் கருகும் அபாயம் உள்ளது. இந்நிலையில், தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படாது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கவே கிடைக்காது. தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான யோசனையை என்னிடம் கேட்டால், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்க்கு சொல்ல நான் தயாராக இருக்கிறேன். கடல்நீரை குடிநீராக்கலாம். அதற்கான இயந்திரங்களை என்னால் ஏற்பாடு செய்துதர முடியும் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
சுப்பிரமணியன் சுவாமியின் இந்த பேச்சு தமிழக மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.