
மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் எம்.எல்.ஏக்கள், ஊதியத்திற்கு அப்பாற்பட்டு, மக்கள் பிரதிநிதிகள் என்ற முறையில் பல்வேறு சலுகைகளை அனுபவித்து வருகின்றனர்.
மருத்துவம், தொலைபேசி, போக்குவரத்து ஆகியவற்றுக்கான படிகளையும் பெற்றுக்கொள்கின்றனர். கேரள அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மருத்துவ செலவுகளை, அதற்கான ரசீதுகளை சமர்ப்பித்து அரசிடமிருந்து அந்த தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு மருத்துவ செலவுகளை திரும்பப்பெறுவதில் கேரளாவில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. கேரளாவில் மருத்துவ செலவு என்ற பெயரில் அளவுக்கு அதிகமான தொகையை மக்கள் பிரதிநிதிகள் பெற்றிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன், ரூ.49,900-க்கு மூக்குக்கண்ணாடி வாங்கியுள்ளார். இந்த தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அரசு மருத்துவ சலுகை அளிக்கிறது என்பதற்காக, கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில், சுமார் 50000 ரூபாய்க்கு சபாநாயகர் மூக்குக் கண்ணாடி வாங்கியிருப்பது அம்மாநில மக்களிடையே பெரும் அதிருப்தியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீராமகிருஷ்ணன், எனக்கு பார்வை குறைபாடு இருக்கிறது. சட்டசபையில் அனைத்து பக்கமும் திரும்பி செயல்பட வேண்டியிருக்கிறது. என்னால் அனைவரையும் சரிவர கவனிக்க முடியவில்லை. எனவே மருத்துவரிடம் கலந்தாலோசித்தபோது தரமான கண்ணாடியாக பயன்படுத்த பரிசீலித்ததால் தான் அதிக விலைகொண்ட தரமான கண்னாடியை வாங்கியதாக தெரிவித்துள்ளார்.
அப்படியே இருந்தாலும் கூட ஐம்பதாயிரம் ரூபாய்க்கா கண்ணாடி வாங்குவது? என மக்கள் ஆதங்கத்துடன் கேள்விகளை எழுப்பத்தான் செய்கின்றனர்.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.