தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 3.72 லட்சம் பெண்கள், 3.57 லட்சம் ஆண்கள் மற்றும் 103 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 7 லட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கின்றனர். சேலம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் 48 இடங்களில் போட்டியிடுகிறார்கள்.மீதமுள்ள 12 வார்டுகள் கம்யூனிஸ்ட் , விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
undefined
அதேபோல அதிமுகவில் சேலம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளிலும் அதிமுகவே போட்டியிடுகிறது. பாமகவும் தனியே 60 வார்டுகளிலும் களமிறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக இடையே கடும் போட்டி ஏற்படும் சூழல் நிலவுகிறது. கொங்கு மண்டலத்தில் எப்படியாவது கால் பதித்தே ஆக வேண்டும் என்ற கணக்கில் முழுவீச்சில் இறங்கி வேலை பார்த்து வருகிறது.
கோவை மாவட்டத்திற்கு செந்தில் பாலாஜியும், சேலம் மாவட்டத்திற்கு கே.என்.நேருவும் நியமிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக இந்த இடங்களில் தங்கி வேலை செய்து வருகிறார்கள். இவையெல்லாம் கொங்கு மண்டலத்தில் கால் பதிக்கவே. அதுவும் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொகுதி என்பதாலும், அவரது கோட்டையில் வெற்றி பெற வேண்டும் என்று கடுமையாக உழைத்து கொண்டிருக்கின்றனர் உடன்பிறப்புக்கள்.
எளிதில் யாரும் கைப்பற்ற முடியாத அளவுக்கு சேலம் மாவட்டத்தையே கைக்குள் வைத்து இருக்கிறார் எடப்பாடி. அதிமுகவினரும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டு வருகிறார்கள். ஒட்டுமொத்த உள்ளாட்சி தேர்தலில் யார் வென்றாலும், சேலம் மாநகரை யார் கைப்பற்றுவார் என்ற கேள்வியே தற்போது எழுந்து இருக்கிறது.