கேட்டதை கொடுத்த மாநில தேர்தல் ஆணையம்.. மகிழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்..!

By vinoth kumarFirst Published Feb 2, 2022, 12:02 PM IST
Highlights

அங்கீகரிக்கப்பட்ட மற்ற கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கும் பணியை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வந்தது.  நேற்று மதிமுகவிற்கு பம்பரமும், அமமுகவிற்கு குக்கர் சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு விவசாய சின்னத்தை மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்காக வரும் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பிப்ரவரி 22ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தில் பல முனை போட்டி நிலவி வருகிறது. அதிமுக, பாமக, பாஜக, அமமுக, தேமுதிக, மநீம மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தனித்துக் களமிறங்குகின்றன. அரசியல் பின்புலம் இருந்தாலும் வார்டுகளில் சொந்த செல்வாக்கு உள்ள வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு உறுதியாகும்.

இந்நிலையில், நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சியினர் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சின்னத்தில் போட்டியிடலாம். அதிமுக கூட்டணியில் உள்ள சிறிய கட்சியினர் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் நிலையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களுக்கு விருப்பமான சின்னத்தில் களமிறங்க உள்ளன. இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட மற்ற கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கும் பணியை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வந்தது.  நேற்று மதிமுகவிற்கு பம்பரமும், அமமுகவிற்கு குக்கர் சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

இந்நிலையில்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்குக் விவசாய சின்னம் ஒதுக்கீடு செய்யும்படி  மாநில தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்திருந்தார். நாம் தமிழர் கட்சி கோரிக்கையை ஏற்று விவசாய சின்னத்தை மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

click me!