கனமழை பாதிப்பு… மத்திய அரசிடம் ரூ. 2,079 கோடி நிவாரண நிதி கேட்டது தமிழக அரசு!!

By Narendran SFirst Published Nov 17, 2021, 4:20 PM IST
Highlights

மழை வெள்ள நிவாரணமாக ரூ.2,079 கோடி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் விடிய விடிய கனமழை பெய்தது. இதை அடுத்து சாலைகளில் மழை நீர் தேங்கி வெள்ளம் ஏற்பட்டது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதை அடுத்து மழை நீரை வெளியேற்றும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் தற்போது வடிந்துள்ளது. இதற்கிடையே அந்தமான் கடலில் ஏற்பட்ட தாழ்வு நிலை காரணமாக மீண்டும் வடதமிழ்நாட்டில் மழை தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பார்வையிட்டு வருகிறார். சென்னையில் 3 நாட்கள் பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், பின்னர் கடலூரிலும், டெல்டா மாவட்டங்களிலும் மழையால் ஏற்பட்ட பயிர்சேதங்களை பார்வையிட்டார். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினார்.

மேலும், தமிழக அமைச்சர்கள் குழுவும், வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இடங்களுக்கு நேரடியாகச் சென்று பாதிப்புகளைக் கணக்கிட்டு அறிக்கையாக வெளியிட்டது. இதையடுத்து வெள்ள பாதிப்பு தொடர்பாக மத்திய அரசிடம் நிவாரணம் கேட்கப்படும் என்று செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார். அதன்படி, இன்று நிவாரணம் தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷாவை திமுக எம்.பி. டி.ஆர்.பாலு சந்தித்து பேசினார். டெல்லியில் நிகழ்ந்த இந்த சந்திப்பில் தமிழ்நாட்டிற்கு ரூ.2,079 கோடியை மழை வெள்ள நிவாரணமாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுக்குறித்து பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சுமார் 24 மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 50,000 ஹெக்டேர் பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. 526 ஹெக்டேர் தோட்டக் கலைப் பயிர்கள் அழிந்துள்ளன. 12 மாவட்டங்கள் மழையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மழை, வெள்ள பாதிப்பில் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

50,000 குடிசைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மழையால் 2,100 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட வெள்ள பாதிப்பு அறிக்கை இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் அளிக்கப்பட்டது. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட தமிழகத்தைச் சீரமைக்க 2,079 கோடி ரூபாய் நிவாரணம் தேவை என்று அமித் ஷாவிடம் வலியுறுத்தியுள்ளோம். இதில் மழை நிவாரணமாக உடனடியாக சுமார் 550 கோடி ரூபாய் வழங்க கோரிக்கை வைத்துள்ளோம். மொத்தமாக வெள்ள நிவாரண நிதியாக 2,629 கோடி ரூபாயைத் தமிழக அரசு கேட்டுள்ளது. மழை வெள்ள பாதிப்பு சேதத்தைப் பார்வையிட ஆறு பேர் கொண்ட குழுவை மத்திய அரசு உடனடியாக இன்று தமிழகத்துக்கு அனுப்புகிறது. முதல்வர் ஸ்டாலினுடமும் அமித் ஷா தொலைபேசியில் பேசினார். நிச்சயமாக தமிழக அரசு கேட்ட வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு அளிக்கும் என்று தெரிவித்தார். தமிழ்நாடு அரசு சார்பாக ஏற்கனவே அவசர நிவாரண பணிகளுக்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!