
85 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமை வர உள்ளதாக தெரிகிறது.
மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு அறிக்கப்பட்டு, நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகளும் அறிவிக்கப்பட்டன.
இதை தொடர்ந்து வெளியான மதிப்பெண் முடிவுகளில், தமிழக மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டு பாடத்திட்டத்தின்படி படித்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 85 சதவிகித இடங்கள் ஒதுக்கீடு செய்ய ஓர் அரசாணையை மாநில அரசு வெளியிட்டது.
தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று கோரி வருகிறது. மாநில பாடத்திட்ட மாணவர்கள் பாதிக்காமல் இருக்கும் வகையில் 85 சதவீத உள் ஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையும் சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.
தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கப்படுவது குறித்து, தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மக்களவை துணை தலைவர் தம்பிதுரை உள்ளிட்டோர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் சந்தித்து வருகின்றனர். இந்த சந்திப்பின்போது, நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கப்படுவது தொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணை வரும் திங்கள் அன்று வர உள்ளதாக தெரிகிறது.