
அதிமுக ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக கூவத்தூரில் எம்எல்ஏக்கள் பேரம் பேசப்பட்டது குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் வித்யா சாகர் ரால் உத்தரவிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள கூவத்தூரில் எம்எல்ஏக்களுக்கு பணம் மற்றும் தங்கம் கொடுக்கப்பட்டதாக சரவணன் எம்எல்ஏ கூறிய வீடியோ ஒன்றை ஆங்கில நாளிதழ் வெளியிட்டது
இதைத் தொடர்ந்து எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடந்தது தொடர்பாக திமுக சார்பில் தமிழக சட்டப் பேரவையில் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி தரவில்லை.
இதையடுத்து இப்பிரச்சனை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆளுநரை சந்தித்து ஸ்டாலின் மனு அளித்தார்.
மேலும் இது தொடர்பாக வீடியோ ஆதாரம் அடங்கிய சிடி யையும் ஆளுநரிடம் ஸ்டாலின் புகார் அளித்தார்.
இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த மனு மீது விசாரணை நடத்த ஆளுநர் வித்யா சாகர் ராவ் இன்று உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், எம்எல்ஏக்கள் பேரம் தொடர்பாக ஸ்டாலின் அளித்த மனு மற்றும் சிடி மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என சபாநாயகர் தனபால் மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியயோருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.