
எடப்பாடி தலைமையிலான அமைச்சரவைக்கு சிக்கல் மேல் சிக்கல், பல ரூபத்தில் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனை ஒரு பக்கம் இருக்க, தற்போது கரூர் விஜயபாஸ்கரின் கல்வி தகுதி சர்ச்சை வெடித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சராக இருக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தேர்தலின்போது தாக்கல் செய்த வேட்பு மனுவில் பிளஸ் 1 கூட முடிக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தாராம்.
ஆனால், அவர் அமைச்சரான பிறகு அவர் பெயருக்கு பின்னால் பி.ஏ என்று போடுவதாக சிலர் பிரச்சினையை கிளப்பி உள்ளனர். உண்மையில், அவர் என்ன படித்துள்ளார் என்பதை, அவர்தான் விளக்க வேண்டும்.
தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் ஒரு விதமாகவும், அமைச்சர் ஆனபிறகு வேறு மாதிரியாகவும் அவர் கல்வி தகுதியில் குறிப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அமைச்சர் விஜயபாஸ்கர் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பி.ஏ படித்து வருவதாக ஒரு தகவலும் கூறப்படுகிறது. ஆனால், அதை முடித்த பிறகு கல்வி தகுதியை மாற்றி போடலாமே, அதற்குள் ஏன் இந்த அவசரம்? என்று கேள்வி எழுப்புகின்றனர் சிலர்.
விஜயபாஸ்கரின் படிப்பு முக்கியம் அல்ல என்றாலும், முன்னுக்கு பின் முரணான தகவல் கொடுப்பது தவறு என்பதால், இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா இருந்தவரை, எந்த ஊடகத்திற்கு முன்னரும் அமைச்சர்கள் வாய் திறக்காமல் இருந்த வரை எந்த சர்ச்சையும் இல்லாமல் இருந்தது. ஆனால், அவர்கள் பேச ஆரம்பித்தவுடன் சர்ச்சைகள் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துவிட்டன.
அமைச்சர் சரோஜா மீதான அதிகாரியின் குற்றச்சாட்டு, அவர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்த விவகாரம், எம்.எல்.ஏ சரவணன் வீடியோ சர்ச்சை என எடப்பாடிக்கு சிக்கல் மேல் சிக்கல் வரிசை கட்டும் நிலையில், தற்போது அமைச்சர் விஜயபாஸ்கரின் கல்வி தகுதி விவகாரம் சிக்கலை மேலும் அதிகப்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்ட அரசியல் முக்கியத்துவம் தொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செயல்பட்டு வரும் நிலையில், இந்த விவகாரம் அந்த மாவட்டத்திலும் அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.