மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மல்லுக்கட்டும் தமிழக தலைவர்கள்! ஆதரவாளர்களை நியமிக்க தீவிரம்... 

First Published Apr 3, 2017, 6:54 PM IST
Highlights
tamilnadu congress leaders fights regards districts leader posting


தொண்டர்களை விட தலைவர்கள் அதிகம் உள்ள கட்சி, உறுப்பினர்களை விட கோஷ்டிகள் அதிகள் உள்ள கட்சி என்று தமிழக காங்கிரசை மற்றவர்கள் விமர்சிப்பதுண்டு.

அந்த விமர்சனத்தை மெய்ப்பிக்கும் வகையில், தற்போது மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் நியமன விவகாரத்தில் கோஷ்டி பூசலின் ஆதிக்கம் கொடிகட்டி பறக்கிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் விலகிய பின்னர், மூன்று மாதங்கள் கழித்து, கடந்த செப்டம்பர் மாதம் திருநாவுக்கரசர் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அவர் பதவி ஏற்று ஆறுமாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தமது ஆதரவாளர்கள் பலரை  மாவட்ட தலைவர்களாக நியமனம் செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளார்.

அதற்கு, கட்சியில் உள்ள மற்ற கோஷ்டி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் தற்போது,  51 மாவட்டத் தலைவர்கள் உள்ளனர்.  இவர்களில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சிதம்பரம், தங்கபாலு ஆகியோரின் ஆதரவாளர்கள் ஆவர். 

இந்நிலையில், தமது ஆதரவாளர்கள் பலரும்  மாவட்டத் தலைவர்களாக வேண்டும் என்று திட்டமிட்ட வருகிறார்  திருநாவுக்கரசர்.

அதற்காக, மொத்தமுள்ள 51 மாவட்டத் தலைவர் பதவி இடங்களை 73 ஆக  உயர்த்த முடிவுசெய்துள்ளார். 

அதாவது, 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டத் தலைவர் என்றும், ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு இரு மாவட்டத் தலைவர்கள் என்றும் அமைப்பு முறையை மாற்ற முடிவு செய்துள்ளார். 

மேலும் இந்த 73 மாவட்டத் தலைவர் பதவிகளுக்கும் தமது ஆதரவாளர்களுக்கே கிடைக்கு வகையில் சிபாரிசு பட்டியல் ஒன்றை, கட்சி மேலிடத்திற்கு வழங்கியுள்ளார்.

மற்ற கோஷ்டி தலைவர்கள் எதிர்த்தாலும் 60 சதவிகித பதவிகளை தன் ஆதரவாளர்களுக்கு வழங்கவே மாவட்டத் தலைவர்களின் எண்ணிக்கையை 73 ஆக உயர்த்தியிருக்கிறார் அவர்.

இதையடுத்து, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு உள்ளிட்டோர் கடும் கோபமடைந்து, தங்களது அதிருப்தியை டெல்லிக்குத் தெரிவித்துள்ளனர். 

இதனிடையே, சோனியா காந்தியை விமர்சனம் செய்த, ஹெச்.ராஜாவின் உருவ பொம்மையை அனைத்து மாவட்டங்களிலும் எரிக்க வேண்டும்   என்று முன்னாள் தலைவர் இளங்கோவன் அறிக்கை வெளியிட்டார். 

கட்சியின், மாநிலத் தலைவராக தாம் இருக்கும்போது, இளங்கோவன் இன்னும் மாநிலத் தலைவர் போலவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறாரே என்று திருநாவுக்கரசர் அப்செட் ஆகியுள்ளார்.

எனவே, தாம் பரிந்துரைத்துள்ள  மாவட்டத் தலைவர்கள் லிஸ்ட்டை உறுதிசெய்து தருமாறு டெல்லி தலைமையிடம் அவர்  வற்புறுத்தி வருவதாக தமிழக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

click me!