வடிவேலு - பார்த்திபன் நடித்த திரைப்படம் ஒன்றில் இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும் என்ற காமெடியுடன் அதிமுகவை ஒப்பிட்டு கலாய்த்து இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் இருக்கும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படவிருக்கிறது. திமுக,அதிமுக,பாஜக,நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் மற்றும் சுயேச்சை என எல்லா கட்சியை சேர்ந்தவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தொடர்ந்து காணொளிக் காட்சி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று திருப்பூர் மக்களிடையே காணொளி வாயிலாக பிரச்சாரம் செய்தார், முதல்வர் ஸ்டாலின். அப்போது பேசிய போது, ‘தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இது உங்கள் அனைவருக்கும் தெரியும். முன்னேற்றம் இல்லை என்றாலும் பரவாயில்லை, மற்ற மாநிலங்களை விட பின்னோக்கி தமிழகத்தை கொண்டுவந்து சேர்ந்துள்ளனர். ஊழல் செய்வதையே முழுநேர வேலையாக அவர்கள் வைத்துள்ளனர். ஒரே நாடு ஒரே தேசம் என கட்டமைக்க முயல்கிறார்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடிய சிறுபான்மையினரை கொச்சைப்படுத்தியது அதிமுக.
3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது திமுக அரசு. முடியவே முடியாது என கூறிய பிரதமர் மோடியை , அறவழியில் போராடி வென்றார்கள் விவசாயிகள். நீட் என்ற பெயரில் , ஏழை மாணவர்கள் கல்வி பயிலுவதை தடுத்து நிறுத்தி , மாணவர்களின் கல்வி கனவை சிதைக்கிறார்கள்.
அதிமுகவை பார்த்தால் இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும் என்ற நடிகர் வடிவேலு காமெடி தான் நினைவுக்கு வருகிறது. அதுபோல அண்ணாவை இழந்து, திராவிடத்தை இழந்து, முன்னேற்றத்தை இழந்து, கழகத்தை பாஜக-விடம் அடகு வைத்து, தொண்டர்களின் கோபத்துக்கு ஆளாகி, வெற்றுப்பலகையாக அதிமுக நிற்கிறது’ என்று கூறினார் முதல்வர் மு.க ஸ்டாலின்