
திருச்சி மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிடும் பாஜகவின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் அண்ணாமலை. அப்போது பேசிய அவர், ‘நீட் தேர்வு வேண்டாம் என மு.க ஸ்டாலின் நாட்டில் உள்ள 12 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார். ஆனால் 12 முதல்வர்களும் ஸ்டாலினின் நீட்டிற்கு எதிரான நிலைப்பாட்டிற்கு பதிலே சொல்லவில்லை. ஏனென்றால் அனைவருக்கும் தெரியும்.
நீட் யாருக்கும் எதிரானது கிடையாது என்று அவர்களுக்கு தெரியும். தமிழகததில் நீட் தேர்வில் வெற்றி பெற்று ஏராளமான மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர். திமுக ஆட்சியில் 15 தனியார் மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அங்கு மருத்துவ படிப்பிற்கான சீட்டு கோடிக்கணக்கில் விற்பனையாகியுள்ளது.
இதுதான் திமுகவின் சமூக நீதி. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து 8 மாத காலம் முடிந்துள்ளது. இதனை முழுமையாக பார்க்கும்போது 80 ஆண்டு ஒரு ஆட்சி இருந்தால் எப்படி இருக்குமோ அப்படியொரு சலிப்பு, கோபம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ராகுல்காந்தி தமிழ்நாட்டில் பாஜக ஆட் சிக்கு வரமுடியாது என்று சொன்னார். அப்பவே பாஜகவுக்கு சுக்கிர திரை ஆரம்பித்து விட்டது.
திமுக அரசு பொங்கல் தொகுப்பாக 21 பொருட்களை கொடுத்தார்கள். வெல்லம் வாங்க மக்கள் வாளிகளை கையில் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது. மஞ்சள் தூளுக்கு பதிலாக மரத்தூளும், மிளகுக்கு பதிலாக பருத்தி கொட்டையும் வழங்கி முறைகேடு செய்துவிட்டு உள்ளாட்சி தேர்தலில் அதனை சாதனையாக சொல்லிக் கொண்டு ஓட்டு கேட்கிறார்கள்.
ஒரு மஞ்சள் பைக்கு ரூ.5, ரூ.10 தான் விலை இருக்கும். ஆனால் பொங்கல் தொகுப்பில் உங்களுக்கு கொடுக்கப்பட்ட மஞ்சள் பையின் விலை ரூ.60 என நிர்ணயிக்கப்பட்டது. 2 கோடியே 15 லட்சம் மஞ்சப்பைகளை வாங்கி அதை ரேசன் கடை மூலமாக கொடுத்து ரூ.120 கோடி கமிஷன் அடித்து இருக்கிறார்கள்’ என்று குற்றம் சாட்டினார் அண்ணாமலை.