
ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் நேற்று வெளியான "காலா" படத்தில் கிளீன் இந்தியா திட்டம் விமர்சிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதற்கு மறுப்பு தெரிவித்த தமிழிசை , திரைப்படத்தையும் யதார்த்த உண்மையையும் இணைத்துப் பார்க்கக் கூடாது என்று கருத்து தெரிவித்தார்.
ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கியுள்ள காலா நேற்று வெளியானது. ரசிகர்கள் மத்தியில் படம் சிறப்பாக உள்ளது என்ற கருத்து பரவியுள்ளது. ரஜினியின் அரசியல் அறிவிப்புக்குப் பின்னர் வெளியாகும் முதல் திரைப்படம் என்பதாலும் படத்தில் அரசியல் கருத்துகள் உள்ளன என்று கூறப்பட்டதாலும் அரசியல் வட்டாரத்திலும் இந்தத் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், நேற்று காலா திரைப்படத்தைப் பார்த்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை , காலா கறுப்பில் ஆரம்பித்து வண்ணமயமாக முடிந்துள்ளது என தெரிவித்தார்.
மேலும், “திரைப்படத்தைத் திரைப்படமாக மட்டுமே பார்க்க வேண்டும். திரைப்படத்துடன் அனைத்தையும் இணைந்து பார்த்தால் பிரிவுதான் ஏற்படும். நாங்களும் சரி... ரஜினியும் சரி... போராடுபவர்கள் அனைவரையும் சமூக விரோதிகள் என்று சொல்லவே இல்லை. போராடினாலே பயங்கரவாதிகள் என்று சொன்னதை போல் பரப்பப்படுகிறது. நிச்சயம் அவ்வாறு சொல்லவில்லை. மக்களின் போராட்டங்களை மதிக்கிறோம். ஆனால், அவை திசை திரும்பி விடக் கூடாது என்பதே எங்களின் கருத்தாக இருந்தது. கிளீன் இந்தியா திட்டத்தை விமர்சித்த மாதிரி இருக்கிறதாகச் சொல்வது ஏற்றுக்கொள்ள தக்கதல்ல.
நான் ஒன்றை மட்டும்தான் கவனித்தேன் கறுப்பில் ஆரம்பித்து இறுதியில் வண்ணமயமாக முடிந்தது. அதேபோல் எல்லோர் வாழ்க்கையும் வண்ணமயமாக இருக்க வேண்டும் என்று கூறிக்கொள்கிறேன்.
அரசியல் வேறு திரைப்படம் வேறு. ரஜினி திரைப்படத் துறையில் இருந்துதான் அரசியலுக்கு வருகிறார். எனவே, அவர் அரசியல் பேசுவது அவரது சொந்த கருத்து. அதேபோல் அவர் நடிகர் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றே. இப்போது மட்டுமல்ல; இதற்கு முன் வந்த நிறைய ரஜினி படங்களில் அரசியல் கருத்துகள் வந்துகொண்டே இருக்கிறது. அதனால் அதையெல்லாம் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. சமூக கருத்துக்கொண்ட திரைப்படங்கள் எனக்குப் பிடிக்கும். அதனால்தான் “காலா” படத்தைப் பார்க்க வந்தேன்” என்று தெரிவித்தார்.