
இரட்டை இலை யாருக்கு என்ற பிரச்னையில் நீடித்த இழுபறிக்குப் பின், அது ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிக்கே என்று கூறி அறிவிக்கை வெளியிட்டது தேர்தல் ஆணையம்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், இது பாஜக., வாங்கிக் கொடுத்தது என்று கூறியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் டிவிட்டர் பதிவில் தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் “இரட்டை இலைச்’சின்னம்’பாஜக வாங்கிக்கொடுத்தது என்று ‘சின்னப்’ பிள்ளைத் தனமாக பேசுகிறார் திருநாவுக்கரசர்....” என்று குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, மேலே இருப்பவர் எல்லாம் பார்த்துக் கொள்வார் என அதிமுக அமைச்சர்கள் கூறி வந்ததை பிரதமர் மோடி நிரூபித்துவிட்டார் என்று இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கிண்டல் அடித்தார்.
இரட்டை இலைச் சின்னத்தை இபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. எம்எல்ஏ.,க்கள், எம்.பி.க்கள் அதிகம் எந்த அணியில் உள்ளனர் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. தற்போது அதிமுக என்ற பெயர் மற்றும் இரட்டை இலைச் சின்னத்தை பயன்படுத்த இபிஎஸ் – ஓபிஎஸ் அணிகளுக்கு தடை ஏதும் இல்லை எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்த அறிவிப்பை அதிமுக அணியினர் வரவேற்றாலும், எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. தமிழகத்தில் உள்ள இந்த அரசை ஆட்டிப்படைக்க பாஜக செய்யும் தந்திரம் என திமுக விமர்சித்துள்ளது.
இது கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொன்னது போல், மேலே இருக்கும் மோடி கரெக்டா பார்த்து செய்துவிட்டார். இது பாஜக., வாங்கிக் கொடுத்தது என கிண்டல் செய்தார். மேலும் தமிழகத்தில் எப்படியாது பாஜக காலூன்ற நினைக்கிறது, அதற்காகத்தான் தேர்தல் ஆணையம் மூலம் இரட்டை இலைச் சின்னத்தை இபிஎஸ் அணிக்கு ஒதுக்கியுள்ளது. தற்போது நடக்கும் இந்த அரசை தங்களது கைப்பிடிக்குள் பாஜக வைத்துள்ளது எனக் கூறினார் திருநாவுக்கரசர்.
அவரது இந்தக் கருத்தைத்தான் விமர்சித்துள்ள டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு என்று கேட்பது போல், திருநாவுக்கரசர் சிறுபிள்ளைத்தனமாகப் பேசுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.