
உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி அப்பல்லோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட போது போய்ஸ் தோட்ட இல்லத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்கள் அடங்கிய பட்டியல் திடீரென மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அவர் குடியிருந்த போயஸ் தோட்ட இல்ல பகுதியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்ததது.
மேலும் ஜெயலலிதாவின் இல்லத்திலும் போலீஸ் பாதுகாப்புடன் பிரைவேட் செக்யூரிட்டி பாதுகாப்பும் அளிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் இருந்து விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஜெயலலிதா வாழ்ந்துவந்த போய்ஸ் தோட்ட இல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்கார்களிடம் விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி முடிவு செய்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி ஜெயலலிதா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டபோது, ஆம்புலன்ஸ் மூலம் அவர் அப்பல்லோ மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக போய்ஸ் கார்டனை தொடர்புகொண்டபோது, ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட செப்டம்பர் 22 ஆம் தேதி, போயஸ் கார்டனில் பணியில் இருந்த போலீஸ்கார்கள் பட்டியல் திடீரென காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து போயஸ் தோட்டத்தில் செப்டம்பர் 22 ஆம் தேதி பணியில் இருந்த போலீஸ்காரர்கள் பட்டியலை தேனாம்பேட்டை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
அந்த பட்டியல் எப்படி காணாமல் போனது ? விசாரணை தொடர்பாக எதையாவது மறைக்க யாராவது சதி செய்துள்ளனரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.