
புதுச்சேரியில் சூப்பர் முதல்வராக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செயல்படுவதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய புதுச்சேரியின் முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- பிரதமர் மோடி ஆட்சியில் விலை வாசி அதிகரித்து இருக்கிறது. பிரதமர் மோடி பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு அளித்து வருகிறார். பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கொரோனா காலத்தில் 50 லட்சம் பேர் வேலை இழந்து இருக்கின்றனர். மாநில அரசு கூறியும் நீட் தேர்வு ரத்து செய்யாததால் மருத்துவ கனவில் இருந்த 18 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். இந்தியாவின் பணவீக்கம் 13% அதிகரித்து உள்ளது. அதேபோல் பொருளாதார வளர்த்தி 9% லிருந்து 6% ஆக குறைந்து உள்ளது.
கடந்த 8 ஆண்டு கால மோடி ஆட்சி சாதனை ஏது செய்யவில்லை. ரேஷன் கடையில் இலவச அரிசி உள்ளிட்ட காங்கிரஸின் திட்டங்களை பாஜகவின் திட்டமாக காட்டி வருகின்றனர். மதத்தை வைத்து ஆட்சியை பிடிக்கலாம் என்ற ஒரே திட்டத்தில் பாஜக இருக்கிறது அது நீடிக்காது. அமலகாத்துறை, சிபிஐ வைத்து எதிர்கட்சி தலைவர்களை பாஜக மிரட்டுகிறது. 2024ல் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சி ஒன்று இணைந்தால் பாஜக தோல்வியடையும். பாஜகவினரின் நபிகள் நாயகம் குறித்த பேச்சு இந்தியாவிற்கு மற்ற நாடுகள் மத்தியில் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான திட்டங்களை முதல்வர் நிறைவேற்றி வருகிறார். தமிழக அரசுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை பொய்யான குற்றச்சாட்டுகளை தினசரி அமைச்சர் மீது தெரிவித்து வருகிறார். புதுச்சேரியில் கொலை, கொள்ளை, நில அபகரிப்பு அதிகரித்து உள்ளது. புதுச்சேரியின் சூப்பர் முதல்வராக தமிழிசை சவுந்தரராஜன் செயல்படுகிறார். ரங்கசாமி டம்மி முதல்வராக இருக்கிறார். 2000 கோடியில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் ஏது செய்யவில்லை.
ஆதீனங்கள் அரசியல் பேசுவதென்றால் வெளியில் வந்து பேசுங்கள். ஆதீனங்களுக்குள் அரசியல் பேசுவது சரியில்லை. கோயில்களில் நடைபெறும் சில தவறுகளை அமைச்சர்கள் தடுக்க வேண்டியது அவர்களின் கடமை அதனை தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்து வருகிறார். பாஜக இந்தியாவில் மத அரசியலை செய்து மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற நோக்கில் செயல்படுகிறது என நாராயணசாமி கூறியுள்ளார்.