
ஆற்காடு வீராசாமியின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்பிய அண்ணாமலைக்கு திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை நாமக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நீட் தேர்வு குறித்து பேசிய அண்ணாமலை;- ஆற்காடு வீராசாமி அண்ணன் இப்போது இல்லை, இறைவனடி சேர்ந்து விட்டார் என பேசினார். 85 வயதான ஆற்காடு வீராசாமி உயிருடன் உள்ள நிலையில், அண்ணாமலை இப்படி பேசியது திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கொதிப்பையும் ஏற்படுத்தியது. பேசியதன் உண்மைத்தன்மை அறியாமல் அந்த வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். ஆற்காடு வீராசாமியின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்பிய அண்ணாமலைக்கு திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கலாநிதி வீராசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தனது கொள்ளு பேரனின் பிறந்தநாள் விழாவில் நேற்று குடும்பத்துடன் கலந்துகொண்டு மகிழ்ந்த ஆர்காட்டார் (என் தந்தை) குறித்து எப்போதும் எங்கள் தலைவர்களை பற்றி உளறும் பா. ஜ.க. தலைவர் @annamalai_k இன்று தவறான கருத்தை கூறியதற்கு வேதனையுடன் வன்மையாக கண்டிக்கிறேன். அவர் நலமாக உள்ளார்.
என்ன பேசுகிறோம் அது உண்மையா இல்லையா என்று யோசிக்காமல் பேசும் இவன் ஒரு தலைவன். இது ஒரு கட்சி. நூபுர் ஷர்மா புகழை விரைவில் இவரும் அடைவார் @annamalai_k என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவை ரீ ட்வீட் செய்த அண்ணாமலை;- Dr.உங்களுடைய தந்தையார் அண்ணன் ஆற்காட்டார் அவர்கள் நீண்ட ஆயுளோடு உங்கள் அனைவருடைய அரவணைப்போடு நன்றாக வாழ்வதற்கு இறைவனை வேண்டுகிறேன்! நாமக்கல் பொதுக்கூட்டத்தில் தவறுதலாக உங்களுடைய தந்தையார் இறைவனடி சேர்ந்து இருக்கின்றார் என்று சொன்ன கருத்துக்காக வருந்துகின்றேன் என்று பதிவிட்டுள்ளார்.