திரும்ப திரும்ப இதையே கேட்குறீங்களே.. இனி இந்தக் கேள்வியைக் கேட்காதீர்கள்.. எடப்பாடி பழனிச்சாமி கடுகடு.. ஏன்?

By Asianet TamilFirst Published Jun 10, 2022, 10:08 PM IST
Highlights

டிடிவி தினகரன் ஒரு தனிக்கட்சியையே தொடங்கி விட்டார். சசிகலா அதிமுகவில் இடம் பெறவில்லை. அதிமுகவில் சசிகலா உறுப்பினரே கிடையாது. 

சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எனவே தயவுசெய்து இதுபோன்ற கேள்விகளை எழுப்ப வேண்டாம் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவுக்கும் சசிகலாவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அதிமுக தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஆனால், அதிமுகவை மீட்பேன், அதிமுகவை நானே வழி நடத்துவேன் என்று சசிகலா தொடர்ந்து பேசி வருகிறார். மேலும் சுற்றுப்பயணம் செல்லும் இடங்களிலும் இதையே பேசி வருகிறார் சசிகலா. அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் தொடர்பு இல்லை என்று அதிமுக இனை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பல முறை சொல்லிவிட்டார். இந்நிலையில் இனி சசிகலா தொடர்பாக எந்தக் கேள்வியும் கேட்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிச்சாமி ஊடகங்களை கேட்டுக் கொண்டுள்ளார்.  

மயிலாடுதுறையில் எடப்பாடி பழனிச்சாமி தருமபுரம் ஆதீனத்தைச் சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ நாங்கள் டிடிவி தினகரனை நீக்கிவிட்டோம்.  சசிகலாவை விட்டுவிட்டோம். ஆனால், பத்திரிகைகள்தான் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள். டிடிவி தினகரன் ஒரு தனிக்கட்சியையே தொடங்கி விட்டார். சசிகலா அதிமுகவில் இடம் பெறவில்லை. அதிமுகவில் சசிகலா உறுப்பினரே கிடையாது. சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எனவே தயவுசெய்து இதுபோன்ற கேள்விகளை எழுப்ப வேண்டாம். பரபரப்பான செய்திக்காக இந்தக் கேள்வியைத் தொடர்ந்து கேட்கிறீர்கள். ஏற்கனவே அனைத்து பத்திரிகையாளர் கூட்டத்திலும் இதுதொடர்பாகப் பேசிவிட்டேன். இனிமேல் கேள்வியைக் கேட்க வேண்டாம்.

தமிழகத்தில் ஆளுங்கட்சி ஒன்றுதான் உள்ளது. மற்ற அனைத்து கட்சிகளுமே எதிர்கட்சிகள்தான். இதில், பிரதான எதிர்கட்சி அதிமுகதான்" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

click me!