நாற்பது சதவீத வாக்குகள் உள்ள கட்சி அதிமுக.. தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி நாங்கதான்.. தம்பிதுரை ஆவேசம்!

Published : Jun 10, 2022, 09:48 PM IST
நாற்பது சதவீத வாக்குகள் உள்ள கட்சி அதிமுக.. தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி நாங்கதான்.. தம்பிதுரை ஆவேசம்!

சுருக்கம்

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி அதிமுகதான் என்பது எல்லாருக்குமே தெரியும் என்று அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

கிருஷ்ணகிரியில் தம்பிதுரை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொறியியல் கல்லூரியைத் திறக்க அனுமதி அளித்தார். பிறகு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பல கல்லூரிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திறக்கப்பட்டன. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது கிருஷ்ணகிரியில் மருத்துவக் கல்லூரி கொண்டு வரப்பட்டிருக்கிறது. அதிமுக ஆட்சிக் காலத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் கல்வியில் மேம்பட்டுள்ளது. நீட் தேர்வு என்பதே போட்டித் தேர்வா என்பதில் கருத்து வேறுபாடு இருக்கிறது. வேலை வாய்ப்புகளுக்காக நடத்தப்படும் தேர்வுகள்தான் போட்டி தேர்வுகள் ஆகும்.

நீட் தேர்வு என்பது போட்டி தேர்வு கிடையாது. எனவே, அதிமுக நீட் தேர்வை ஏற்கவில்லை. நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு ஆகும். தமிழகத்தில் ஆளுங்கட்சியைத் தவிர எல்லா கட்சிகளுமே எதிர்க்கட்சிகள்தான். பாஜக, காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகள் என அனைவருமே எதிர்க்கட்சிகள்தான். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கோ, விடுதலை சிறுத்தைகளுக்கோ திமுக அமைச்சர் பதவி வழங்கவில்லை. அதனால், அவர்களும் எதிர்க்கட்சிகள்தான். தமிழகத்தைப் பொறுத்தவரை 66 சட்டப்பேரவை உறுப்பினர்களைப் பெற்று 40 சதவீத வாக்குகளை நாங்கள் வைத்திருக்கிறோம். 

அதனால் பிரதான எதிர்க்கட்சி அதிமுகதான் என்பது எல்லாருக்குமே தெரியும். ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களால் போலீசார் உள்பட பலரும் தற்கொலை செய்திருக்கிறார்கள். இதை தடுக்க திமுக  அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்திருக்கிறார். அதற்கு தமிழக அரசு செவி சாய்க்கும் என்று நான் நம்புகிறேன். தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு கெட்டு விட்டது என்று அதிமுக தொடர்ந்து சொல்லி வருகிறது. எதிர்க்கட்சிகள் சொல்கிறார்கள் என்றெல்லாம் புறக்கணிக்காமல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்” என்று தம்பிதுரை தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!