
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தண்டையார்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு கடந்த ஓராண்டாக காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தங்களின் பலத்தை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் திமுக, அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களும் சுயேட்சையாக தினகரனும் களமிறங்கியுள்ளனர். களத்தில் பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் இருக்கும்போதிலும், பிரதான போட்டி என்பது திமுக, அதிமுக, தினகரன் என மும்முனைப் போட்டியாகவே இருக்கும் என கருதப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகருக்கு நடைபெற இருந்த தேர்தல் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதனால் இந்தமுறை பணப்பட்டுவாடா நடைபெறாமல் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
வெளி மாவட்டத்திலிருந்து ஆர்.கே.நகருக்குள் வாகனங்களுக்கு கட்டுப்பாடு, மாலை 5 மணிக்குமேல் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யக்கூடாது, அனுமதி பெற்ற எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே வேட்பாளர்களுடன் பிரசாரத்திற்கு செல்ல வேண்டும் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
இந்நிலையில், ஆர்.கே.நகரில் அதிகளவில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாகவும் அதைத்தடுக்க தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக வேட்பாளர் கரு.நாகராஜனுடன் இணைந்து தண்டையார்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார்.