
சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை மீண்டும் ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாம்...! யார் இந்த உத்தரவை அளித்தது...! அதெல்லாம் தெரியாது. ஆனால், இப்படி ஒரு பகீர் தகவலைப் பகிர்ந்துள்ளவர் ஜெயானந்த் திவாகரன். அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதனால் இந்தத் தேர்தல் ரத்து செய்யப் படும் என்ற விவரத்தை அவரது கருத்தின் கீழே சிலர் கமெண்ட் போட்டு தெரிவித்துள்ளனர். அதில் ஒருவரின் கருத்துதான், ஜெயானந்த் திவாகரனின் இந்த பகீர் ஸ்டேட்மெண்டுக்கு பின்னணியில் அமைந்த ஒன்று!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமான நிலையில், ஆர்.கே. நகருக்கு முதலில் ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில், பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகார்களை அடுத்து, தேர்தல் ஆணைய அதிகாரிகள் களத்தில் இறங்கினர். அப்போது, அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித் துறை நடத்திய சோதனையில், பணம் பறிமுதல் செய்தது. பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்தனர். எவர் மூலம் பணம் எப்படி விநியோகம் செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டு கொடுத்த குறிப்புகள் அடங்கிய ஆவணத்தையும் கைப்பற்றினார்கள்.. இதை அடுத்து,ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது தேர்தல் ஆணையம்.
இதன் பின்னர், மீண்டும் இடைத்தேர்தல் வரும் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. சென்ற முறை போல் அல்லாமல், இம்முறை கட்சிகளின் காட்சிகளும் வேறாகிவிட்டன. சென்ற முறை அரசியல் அரசு நிர்வாக பலத்துடனும் பண பலத்துடனும் களம் இறங்கினார் டிடிவி தினகரன். இப்போது அவர் எதிர்க்கட்சியினரைப் போல் கூட அல்ல, எதிரிக்கட்சியினரைப் போல் தெரிகிறார் ஆளும் தரப்புக்கு! இதனால் நெருக்கடிகள் கூடும். டிடிவி தினகரன் சுயேச்சையாகக் களம் இறங்க, அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, சுயேச்சைகள் என பலர் களத்தில் உள்ளனர்.
சுயேச்சை வேட்பாளரான தினகரன், சென்ற முறையே மக்களை நன்கு கவனித்து விட்டதால், இம்முறையும் அதே தொப்பி சின்னத்தைக் கேட்டுப் பார்த்தார். அவர் கேட்டது கிடைக்கவில்லை. இதனால், நீண்ட நேர ஆலோசனைக்குப் பின், குக்கர் சின்னத்தை தேர்ந்தெடுத்தார். இப்போது தொகுதியில் குக்கர் விசில் சத்தம் அதிகம் கேட்கிறது.
சின்னம் கிடைப்பதற்கு முன் வரை, தினகரை தொகுதியில் பிரசாரம் செய்ய போலீஸார் அனுமதிக்கவில்லை. குக்கர் கையில் கிடைத்த பிறகு, இப்போது குக்கரும் கையுமாக வலம் வருகிறார் தினகரன்.
இந்நிலையில்தான், திவாகரனின் மகன் ஜெயானந்த், தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தப் பட்டுள்ளது என்பது போல் கூறியுள்ளார். தொடர்ந்து டிடிவிக்கு வெற்றி என்று ஹேஷ் டாக்க் வைத்து போட்டுள்ளார்.
சரி.. இதில் என்ன சூட்சுமம் இருக்கும் என்று பார்த்தால், ஏற்கெனவே பணப் பட்டுவாடா என்று சொல்லித்தான் தேர்தல் நிறுத்தப் பட்டது. இப்போது ஒரு காரணம் தேர்தல் ஆணையத்துக்கு கிடைத்துவிடுமாம். அது, என்னவென்றால், யாராவது கடைகளுக்குச் சென்று, பில் வாங்கி வைத்துக் கொண்டு குக்கர் வாங்கினாலும் கூட இதை டிடிவி தினகரன் தான் கொடுத்தார் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் கணக்கு காட்டி, தேர்தலை நிறுத்தி விடுவார்கள் என்று கருத்திட்டுள்ளார்.
ஓ.. அப்படி எல்லாம் கூட ஒரு சப்பை காரணம் தேர்தல் ஆணையத்துக்குக் கிடைக்குமோ என்னவோ..?