
திருமாவளவனின் தலைக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு அறிவித்த பயங்கரவாதியை கைது செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
அம்பேத்கர் நினைவுநாள் மற்றும் பாபர் மசூதி இடிப்பு நாளான டிசம்பர் 6-ம் தேதியன்று தலித் இஸ்லாமியர் எழுச்சி நாளாக கடைபிடித்து அன்றையை தினத்தில் சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் பேசிய திருமாவளவன், அயோத்தியில் ராமர் கோவில் இருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டதாகவும் அதனால்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டதாகவும் சங் பரிவார் அமைப்புகள் கூறுகின்றன. அப்படி பார்த்தால், பெரும்பாலான புத்த விகார்களையும் சமண கோவில்களையும் இடித்துத்தான் இந்து கோவில்கள் கட்டப்பட்டுள்ளன என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அப்படி பார்த்தால், இந்து கோவில்களை இடித்துவிட்டு புத்த விகார்கள் கட்ட வேண்டும் என்று கூறமுடியுமா? என பேசியிருந்தார்.
ஆனால், திருமாவளவன் இந்து கோவில்களை இடிக்கவேண்டும் என கூறிவிட்டார் என்றுகூறி பாஜகவினரும் இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட சில அமைப்புகளும் திருமாவளவனுக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்துவருகின்றன.
மத நல்லிணக்கத்திற்கு எதிராக பேசிய திருமாவளவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
இவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில், இந்து முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த ஒருவர், திருமாவளவனின் தலையை கொண்டுவருபவருக்கு ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருமாவளவனின் தலைக்கு பரிசு அறிவித்தவரை கைது செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள் மற்றும் பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் 6 அன்று தலித் இஸ்லாமியர் எழுச்சி நாளாக கடைப்பிடித்து அன்று சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. நானும் பங்குகொண்ட இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய வி.சிகவின் தலைவர் திருமாவளவன் அவர்கள் இந்துக் கோவில்களை இடிக்க வேண்டும் என்று எவ்வகையிலும் குறிப்பிடவில்லை. தர்க்க ரீதியாக ஒரு வழிப்பாட்டுத் தலம் முன்பு வேறு மதத்தின் வழிப்பாட்டுதலமாக இருந்தது என்று எடுத்துக் கொண்டால் நாட்டில் எந்தவொரு வழிப்பாட்டுத் தலமும் மிஞ்சாது என்று வரலாற்று உண்மைகளைத் தான் திருமாவளவன் எடுத்துரைத்தார். ஆனால் இந்த உரையை சில ஊடகங்கள் கோவில்களை இடித்து விட்டு பவுத்த விகார்களை கட்ட வேண்டும் என திருமாவளவன் பேசியதாக திரித்துச் செய்தியை வெளியிட்டுள்ளன.
இந்த திரிப்பு செய்தியை கேட்டுவிட்டு திருப்பூரை சேர்ந்த இந்து முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த ஒரு சிந்தனைப் பயங்கரவாதி, திருமாவளவனின் தலைக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளார். அந்த பயங்கரவாதியை கைது செய்ய வேண்டும் என ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.