
’வயதானவன் நான். அடுத்த தேர்தலிலெல்லாம் இவ்ளோ ஆக்டீவா அரசியல் பண்ணுவேனான்னு தெரியல. அதனால இந்த ஒருவாட்டி வாய்ப்பு தாங்க.’ என்று சென்டிமெண்டாக மதுசூதனன் ஒரு பக்கம் பேச, ‘அன்னைக்கு எங்க வேட்பாளர் மதுசூதனன் தான். அன்னைக்கு உங்க வேட்பாளரா இருந்த தினகரன் இன்னைக்கு இங்கே இல்ல. அதனால நம்ம வேட்பாளரா மதுசூதனையே நிக்க வெச்சுடலாம்.’ என்று பன்னீர் மறுபுறம் நியாயமான காரணங்களோடு நெருக்கடி கொடுக்க...ஆப்சனே இல்லாமல் சம்மதம் தந்தார் எடப்பாடி பழனிசாமி.
ஜெயக்குமாரின் கடும் எதிர்ப்புகளையும் மீறி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு களமிறக்கப்பட்டிருக்கும் மதுவுக்கு ஆயிரத்தெட்டு பிரச்னைகள். உள்குத்து, துரோக குழி தோண்டல்கள், சரிந்து கிடக்கும் கட்சியின் பெருமை, ஜெயலலிதா இல்லாத சூழ்நிலை என்று போட்டுப் புரட்டுகிறது பஞ்சாயத்து.
இந்நிலையில், சமீபத்திய புகைப்படம் ஒன்று அவரது கெளரவத்தையும், கெத்தையும் கன்னாபின்னாவென கைமா பண்ணிவிட்டது.
அதாவது இடைத்தேர்தல் ஆலோசனைக் கூட்டம் ராயப்பேட்டையிலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டுவிட்டு வெளியே வந்த மதுசூதனன் தனது கால் ஷூவை போட முடியாமல் திணறி தள்ளாடியிருக்கிறார். தன் உதவியாளரை அழைத்துப் போட்டுவிட சொல்லியிருக்கிறார். உதவியாளரும் மதுவுக்கு முன் மண்டியிட்டமர்ந்து ஷூக்களை போட்டுவிட்டிருக்கிறார். அப்போதும் மது சற்றே தடுமாற, அருகிலிருந்தவர்கள் அவரது கரங்களை பிடித்து சப்போர்ட் செய்து நிற்க வைத்திருக்கின்றனர்.
மதுசூதனனுக்கு அவரது உதவியாளர் ஷூ போட்டுவிடுவதை பக்கத்திலிருந்த யாரோ ஒரு வி.ஐ.பி. தன் மொபைலில் படமெடுத்து பரப்பிவிட்டார். இதைப்பார்த்துவிட்டு ‘குனிஞ்சு தன்னோட ஷூவை கூட போட முடியாத பெரியவர் மதுசூதனன், ஓடியாடி பிரச்சாரம் செய்யுறது எப்படி? அப்படியே ஜெயிச்சாலும் மக்களுக்கு என்னத்த ஆடியோடி சேவை செய்யப்போறார்!’ என்று கிண்டலாக கிழித்தெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த விஷயத்தால் பெரிதும் காயம்பட்டுவிட்டார் மதுசூதனன். தனக்கு உதவியாளர் ஷூ மாட்டிவிடுவதை போட்டோ எடுத்தது யார்? என்று தேடும் மூவில் இருக்கிறாராம். அநேகமாக அது அவருக்கு சீட் கொடுக்க கூடாது என்று ஒத்தைக்காலில் நின்றவரின் டீமை சேர்ந்த நிர்வாகிதான் என்று தெரிய வந்திருக்கிறதாம்.
உடனே பன்னீரிடமும், பழனிச்சாமியிடமும் இதை ஒரு புகாராக கொண்டு சென்றிருக்கும் மதுசூதனன் ‘இப்படி என்னை அசிங்கப்படுத்துறவங்க, தேர்தல்ல என்னை தோக்கடிக்க என்னென்ன வேல பார்ப்பாங்க!’ என்று புலம்பிக் கொட்டியிருக்கிறார்.