ரஜினி கட்சியில் தமிழருவி மணியன் முதல்வர் வேட்பாளரா..? அரசியலில் ‘பாபா’ திரைக்கதை எழுதும் ரஜினி?

By Asianet TamilFirst Published Mar 10, 2020, 8:26 AM IST
Highlights

ரஜினியின் ஆலோசகரைப்போல செயல்பட்டுவரும் தமிழருவி மணியனே, ‘ நான் அதிகாரத்துக்கு வரமாட்டேன்’ என்று ரஜினி சொன்னதாக சொல்லியிருப்பதன் மூலம், முதல்வராக ரஜினி விரும்பவில்லை என்பது தெளிவாகிறது. 2002-ம் ஆண்டில் வந்த ‘பாபா’ படத்துக்கு கதை-திரைக்கதையை ரஜினிதான் எழுதினார். அந்தப் படத்தில், தனக்குள்ள சக்தியைப் பயன்படுத்தி ஒரு நல்லவரை அடையாளம் காட்டி ஆட்சியில் உட்கார வைப்பார். 

கட்சி ஆட்சியைப் பிடித்தால் தான் முதல்வராக மாட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் சொன்னது உண்மை என்பது தமிழருவி மணியனின் பேச்சின் மூலம் வெளிப்பட்டுள்ளது.
ரஜினி எப்போது கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்ப்பே இன்னும் ஓயவில்லை. அதற்குள் கட்சி ஆட்சியைப் பிடித்தால், தான் முதல்வராக விரும்பவில்லை என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரஜினி சொன்னதாக தகவல் வெளியானது அதைவிட பரபரப்பை கிளப்பிவிட்டிருக்கிறது. சாணக்யா சேனலில் ரங்கராஜ் பாண்டே இந்தத் தகவலை வெளியிட்டார். பல செய்தி தொலைக்காட்சிகளும் இந்தத் தகவலை வெளியிட்டன. இதை ரஜினி தரப்பு மறுக்கவில்லை. இந்நிலையில் விழுப்புரத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் பேசிய  தமிழருவி மணியனின் பேச்சு, கட்சியும் ஆட்சியும் தனித்தனியாக இருக்க வேண்டும் என்று ரஜினி சொன்னதை உறுதிப்படுத்தியிருக்கிறது.
விழுப்புரம் நூல் வெளியீட்டு விழாவில் தமிருவி மணியன் பேச்சின் சாரம்சம் இதுதான். “ரஜினியை இரண்டாண்டுகளுக்கு முன்பு சந்தித்தபோது கட்சித் தொடங்குவீர்களா என்று கேட்டேன். நிச்சயமாகத் தொடங்குவேன். முன்  வைத்த காலை பின்வைக்கமாட்டேன். ஒரு விஷயத்தை சொல்வதற்கு முன்பு ஆயிரம் முறை யோசிப்பேன். ஆனால், முடிவு செய்துவிட்டால், அதைச் சொல்ல பின்வாங்கமாட்டேன் என்று சொன்னார். அதேபோல எக்காலத்திலும் திமுக, அதிமுகவை பக்கத்தில் வைத்துக்கொள்ளாதீர்கள் என்று சொன்னேன். நிச்சயமாக இரு கட்சிகளுடனும் கூட்டணி வைக்க மாட்டேன் என்றும் சொன்னார்.
தமிழக அரசியல் அழுக்கு நிரம்பியுள்ளது. திமுக-அதிமுக கட்சிகள் 50 ஆண்டுகள் தமிழகத்தை பாழ்படுத்திவிட்டன. சுதந்திர போராட்டத்தில் காந்தியை நம்பி இந்தியாவே பின்னால் வந்தது. அதேபோன்று மாற்றத்தை ஏற்படுத்த ரஜினியின் பின் தமிழகம் வர வேண்டும். அவர் சினிமா வாய்ப்பு இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை. தமிழக மக்கள் நலனுக்காகவும் அரசியலை துாய்மைப்படுத்தவுமே வருகிறார். வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால், எம்.ஜி.ஆரின் அடிமட்ட தொண்டர்கள் ரஜினியோடு இணைந்தால்தான் முடியும்.


ரஜினி மாவட்ட செயலளார்களைச் சந்திக்கும் முதல் நாள் நான் ரஜினியைச் சந்தித்தேன். அதற்கு 4 நாட்களுக்கும் முன்பும் சந்தித்தேன். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், 'கட்சி ஆட்சிக்கு வந்து அமைச்சர் பொறுப்பேற்றால் கட்சிப் பதவி பறிக்கப்படும். 48 வயதுக்கு உட்பட்டோருக்கு 60 சதவீதம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும்' என்று தெரிவித்தார். கட்சி ஆட்சிக்கு வந்தால் நான் அதிகாரத்துக்கு வரமாட்டேன் என்றும் ரஜினி கூறினார். மூன்றாவது நிபந்தனையை மட்டும் மாவட்ட செயலாளர்கள் ஏற்கவில்லை.

 
ரஜினி பதவியை விரும்பாதவராக இருக்கிறார். ஒரு கவுன்சிலர் பதவிக்கே என்னவெல்லாம் செய்கிறார்கள். ஆனால், ரஜினியைப் போன்ற ஒருவரை திமுகவில் காட்ட முடியுமா? ரஜினிக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். நான் உட்பட எவனையும் நீங்கள் முதல்வர் என்று சொல்லாதீர்கள். கட்சித் தலைமையாக யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், ஆட்சித் தலைமையாக ரஜினி மட்டுமே இருக்க வேண்டும். தமிழகத்தில் மாற்று அரசியல் தேவைப்படுகிறது. அந்த மாற்றத்தை ரஜினியால்தான் உருவாக்க முடியும்” என்று தமிழருவி மணியன் பேசினார்.


ரஜினியின் ஆலோசகரைப்போல செயல்பட்டுவரும் தமிழருவி மணியனே, ‘ நான் அதிகாரத்துக்கு வரமாட்டேன்’ என்று ரஜினி சொன்னதாக சொல்லியிருப்பதன் மூலம், முதல்வராக ரஜினி விரும்பவில்லை என்பது தெளிவாகிறது. 2002-ம் ஆண்டில் வந்த ‘பாபா’ படத்துக்கு கதை-திரைக்கதையை ரஜினிதான் எழுதினார். அந்தப் படத்தில், தனக்குள்ள சக்தியைப் பயன்படுத்தி ஒரு நல்லவரை அடையாளம் காட்டி ஆட்சியில் உட்கார வைப்பார். 
அந்தப் படத்தின் கதையைப் போலவே தற்போது கட்சித் தொடங்கி, பிரசாரம் செய்து வேறு ஒருவரை ரஜினி முதல்வராக்கப் போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நான் உட்பட எவனையும் முதல்வர் என்று சொல்லாதீர்கள் என்று தமிழருவி மணியன் சொன்னதன் மூலம், தமிழருவி மணியனை முதல்வராக இருக்கும்படி ரஜினி சொன்னாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

click me!