
தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டு 25 தொகுதிகளில் வெற்றி பெறும் அளவுக்கு பாஜக வளர்ந்திருக்கிறது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் மதுரையில் போட்டியிட்ட பாஜகவினரை அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் மத்தியில் அண்ணாமலை பேசுகையில், “தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக எத்தனை வாக்குகள் பெற்றிருந்தாலும் அதெல்லாம் வைர வாக்குகள். அதற்காக நாம் பெருமைப்பட வேண்டும். தேர்தலின் போது வீடு வீடாக சென்று பொதுமக்களைச் சந்தித்திருக்கிறீர்கல். அதன்மூலம் மக்கள் மனதில் பாஜக அனைவருக்குமான கட்சி என்பதை நீங்கள் நிலை நிறுத்தி இருக்கிறீர்கள். இதனால் பாஜகவின் மதிப்பு உயர்ந்திருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் தளர்ந்து போய் விடக்கூடாது. பணம், படை பலத்தை எதிர்த்து பெற்ற வாக்குகள் நமக்கு பெரிய வாக்குகள். அடுத்த தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறலாம்.
பாஜகவில் உறுப்பினராக சேர வேண்டுமென்றால், பாரத அன்னை மீது மரியாதை, நம்பிக்கை இருந்தாலே போதும். ஒரு குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வருங்காலம் பாஜகவின் காலமாக இருக்கும். அதற்காக கடுமையாக உழைத்து வருகிறோம். தொடர்ந்து நாம் உழைப்போம். திமுகவினரைப் பற்றி எல்லோருக்குமே தெரியும். நேரடியாக மோத முடியாவிட்டால் உடனே தவறாகப் பேசுவார்கள். அது திமுகவுக்கு கைவந்த கலை ஆகும். அவற்றையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் தொடர்ந்து உழைக்க வேண்டும். அப்படி உழைத்தால் தமிழக மக்களின் விடிவெள்ளியாக பாஜக வளரும்.
நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றுள்ளது. அடுத்து குஜராத், கர்நாடகம், டெல்லி தேர்தல்கள் வரவுள்ளன. 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோடி மீண்டும் பிரதமராவது உறுதி. நம்முடைய சந்தேகம் அது 300 இடங்களா, 400 இடங்களா, 450 இடங்களை நாம் பிடிப்போமா என்பதுதான். தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிட்டு 15 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. தமிழகத்தில் தனித்துப்போட்டியிட்டு 25 இடங்களில் வெற்றி பெறும் அளவுக்கு பாஜக வளர்ந்திருக்கிறது” என்று அண்ணாமலை தெரிவித்தார்.