தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல்.. 78 சதவீத வாக்குகள் பதிவு.. மாநில தேர்தல் ஆணையத்தின் இறுதி பட்டியல்.!

By Asianet TamilFirst Published Oct 10, 2021, 7:16 PM IST
Highlights

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இரு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
 

தமிழகத்தில் காலியாக இருந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. 27 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தப் பதவிகளைக் கைப்பற்ற 80,819 பேர் களமிறங்கினர். இந்தத் தேர்தலில் 76.60 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 
முதல் கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 77.43 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர். இரண்டாம் கட்டமாக 1,324 ஊராட்சித் தலைவர்கள், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் மற்றும் 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 130 பதவிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. 6,652 வாக்குச்சாவடிகளில் மக்கள் ஆர்வமாக வாக்கை செலுத்தினர். இந்நிலையில், தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான இறுதிப் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.
அதன்படி, காஞ்சிபுரத்தில் 72.33%, செங்கல்பட்டில் 75.51%, வேலூரில் 81.07%, ராணிப்பேட்டையில் 82.52%, திருப்பத்தூரில் 77.85%, விழுப்புரத்தில் 85.31%, கள்ளக்குறிச்சியில் 82.59%, திருநெல்வேலியில் 69.34%, தென்காசியில்73.35% வாக்குகள் பதிவாயின. மொத்தமான  78.47% வாக்குகள் பதிவாகியுள்ளன. இரு கட்டங்களிலும் சேர்த்து 77.95 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. பதிவான வாக்குகள் 12-ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இதற்கிடையே குன்றத்தூர் மற்றும் ஆலப்பாக்கத்தில் உள்ள வார்டு உறுப்பினர் பதவிக்கு நாளை மறுதேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 

click me!