திராவிட மாடலில் தமிழ்நாடு வளரணும்... முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிப்படுத்திய ஆசை..!

By Asianet TamilFirst Published Oct 10, 2021, 6:59 PM IST
Highlights

திராவிட மாடலில் தமிழ்நாடு வளர வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 

சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் அமைக்காத பொருளாதார ஆலோசனைக் குழுவை தமிழக அரசு நியமித்திருக்கிறது. இந்தக் குழுவில் உள்ள  எஸ்.நாராயண் தனது புத்தகத்தில், “கலைஞர் ஆட்சி காலமானது சமூக மாற்றத்துக்கான அடித்தளமாக கிராம அளவிலும் கூட்டுறவு மட்டத்திலும் அமைப்பு ரீதியாகவும் அமைந்தது” என்று எழுதியிருக்கிறார். இதற்கு பெயர்தான் ‘திராவிட மாடல்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து சமூகங்களை உள்ளடக்கிய, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய, அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கியதுதான் திராவிட மாடல்.
அந்த நோக்கத்துடன் தமிழ் நாடு வளர வேண்டும். அதுதான் என்னுடைய ஆசை. அதை நோக்கித்தான் திமுக ஆட்சியின் திட்டமிடுதல்கள் அமைந்துவருகின்றன. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்புகள், தனிநபர் வருமானம், மக்களின் சமூக உரிமை, சமூக சுய மரியாதை என எல்லாம் உயர வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாகவும் அது இருக்க வேண்டும் என்று திட்டமிட்டே ஆட்சியை நடத்திகொண்டிருக்கிறோம். தமிழ்நாடு அரசு 5 லட்சம் கோடி கடனில் உள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் 2 லட்சம் கோடி கடனில் உள்ளன.


ஆனால், நிதி ஆதாரம்  விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில துறைகளின் மூலமாகத்தான்  வருகிறது. வரி வசூலில் வந்த மாநில உரிமைகளை மத்திய அரசு ஜி.எஸ்.டி. மூலம் பறித்துவிட்டது. எனவே, வரி வசூலை நம்ப முடியாது. நம்முடைய வளத்தை வைத்து நாம் நம்மை வளப்படுத்திக் கொள்ளும் நிலையில்தான் இருக்கிறோம்.” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.  
 

click me!