தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல்.. பாஜக பணிக் குழுவில் நடிகை குஷ்புவுக்கு இடமில்லை... இதுதான் காரணமா.?

By Asianet TamilFirst Published Aug 4, 2021, 10:14 PM IST
Highlights

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் அமைக்கப்பட்ட பணிக்குழுவில் நடிகை குஷ்புவின் பெயர் சேர்க்கப்படாதது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
 

தமிழகத்தில் கடந்த 2019 டிசம்பரில் ஊரகப் பகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. ஆனால், அப்போது புதிதாகப் பிரிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை. திருப்பத்தூர், நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. மேலும் இந்த 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகிவருகின்றன. 
அதிமுக ஆலோசனையைத் தொடங்கியுள்ள நிலையில், அந்தக் கூட்டணியில் உள்ள பாஜக,  உள்ளாட்சி தேர்தலை சந்திக்க மாநில அளவிலான குழுவை அமைத்திருக்கிறது. அந்தக் குழுவில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கட்சியின் மாநில துணை தலைவர்கள் நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா, பொதுசெயலர்கள் கே.டி.ராகவன், செல்வகுமார், ராம சீனிவாசன், கரு.நாகராஜன், செயலாளர்கள் கார்த்தியாயினி, தேசிய மகளிரணி அணி தலைவர் வானதி சீனிவாசன், தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி, சசிகலா புஷ்பா, மாநில செய்தித்தொடர்பாளர் நரசிம்மன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
இந்தக் குழுவில் நடிகை குஷ்புவின் பெயர் இடம் பெறவில்லை. கடந்த ஆண்டு பாஜகவில் சேர்ந்த நடிகை குஷ்பு, சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளராகவும் கட்சி அவரை அறிவித்தது. தொடக்கம் முதலே இப்படி முக்கியத்தும் பெற்று வந்த குஷ்புவுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணிக்குழுவிலேயே இடம் கிடைக்கவில்லை. பாஜகவின் நட்சத்திர பேச்சாளரான அவருக்கு தேர்தல் பணிக்குழுவில் இடம் வழங்காதது கேள்வியை எழுப்பியிருக்கிறது.
அண்மையில் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் 8 ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், இவர்களில் ஒருவர்கூட பெண் இல்லை என்று குடியரசுத் தலைவரையே நடிகை குஷ்பு கேள்வி கேட்டிருந்தார். ஆளுநர்கள், மத்திய அரசின் பரிந்துரையின் பேரில்தான் நியமிக்கப்படுகிறார்கள். குஷ்புவின் இந்த விமர்சனம் டெல்லி  தலைமையையே கேள்வி கேட்டிருந்ததைப் போல இருந்தது. இதனால், குஷ்பு மீது அக்கட்சியின் தலைமை கோபத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தேர்தல் பணிக்குழுவில் குஷ்புவின் பெயர் தவிர்க்கப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று பாஜகவில் பேசப்படுகிறது.    

click me!