விடியல்னு சொல்லி இருட்டில் தள்ளிடுச்சு திமுக ஆட்சி.. இளைஞர்கள் வாழ்வை நாசமாக்காதீங்க.. சீறும் சி.வி.சண்முகம்!

Published : Aug 04, 2021, 08:59 PM IST
விடியல்னு சொல்லி இருட்டில் தள்ளிடுச்சு திமுக ஆட்சி.. இளைஞர்கள் வாழ்வை நாசமாக்காதீங்க.. சீறும் சி.வி.சண்முகம்!

சுருக்கம்

விடியல் தருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, தமிழக இளைஞர்களை இருட்டுக் குகையில் தள்ளி, அவர்களது வாழ்க்கையை நாசமாக்கும் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன் முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.  

இதுதொடர்பாக சி.வி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக, இன்றைய உலகம் கணினியில் தொடங்கி கைப்பேசி வடிவில் மனிதனின் உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்டது. நாட்டில் மாணவச் செல்வங்கள், இளைய சமுதாயத்தினர் தங்களது படிப்பு, அறிவு, வாழ்வின் முன்னேற்றத்துக்கு இந்த விஞ்ஞானப் புரட்சியினைப் பயன்படுத்துகின்றனர். நல்லவற்றுக்குத் துணை நிற்கும் இந்த விஞ்ஞானப் புரட்சியை, ஒருசிலர் தங்களது சுயநலத்துக்காகப் பயன்படுத்தி, இக்கால இளைஞர்களின் ஆசையைத் தூண்டி, தகாத செயல்களுக்கு உபயோகப்படுத்தி வருவது வருந்தத்தக்கது.
பப்ஜி, ரம்மி போன்ற விளையாட்டுகளை ஆன்லைன் மூலமாக அறிமுகப்படுத்தி, தற்கால இளைஞர்களை ஒரு நாசக்கார கூட்டம் சீரழித்து வந்தது. இதுபோன்ற சைபர் குற்றவாளிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. ஆன்லைன் ரம்மி சூதாட்டம் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் இளைஞர்களின் வாழ்வைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. பணம் சம்பாதிக்கும் ஆசையில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் லட்சக்கணக்கான பணத்தை இழந்தனர். பண இழப்பைத் தாங்க முடியாத சிலர் தற்கொலை செய்துகொண்டனர். அன்றைய தினத்தில் சென்னை உயர் நீதிமன்றமும் இத்தகைய ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்து, அரசு ஏன் சட்டம் பிறப்பிக்கக் கூடாது என்று தமிழக அரசைக் கேட்டுக்கொண்டது.
இளைஞர்களின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தினைத் தடுக்க, பொதுமக்கள், தாய்மார்கள், பல்வேறு அமைப்புகள் மூலமாக விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், அப்போதைய தமிழக அரசு தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்து, 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது. இதன் மூலம் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் உடனடியாகத் தடை செய்யப்பட்டது. தமிழக அரசு இயற்றிய இச்சட்டத்துக்கு உயர் நீதிமன்றமும் தனது பாராட்டைத் தெரிவித்தது. அதன்படி, அமலுக்கு வந்த சட்டம், கோடிக்கணக்கான பெற்றோர்களின் வயிற்றில் பால் வார்த்தது. இந்த உத்தரவால் பாதிக்கப்பட்ட ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல் மாத இறுதியில் விசாரணைக்கு வந்தபொழுது, தமிழகத்தில் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றதால், இவ்வழக்கு ஜூன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்து, அப்போதைய அதிமுக அரசு இயற்றிய சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக, பிரபல உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் ஆன்லைன் சூதாட்டம் நடத்துபவர்களுக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தங்கள் வாதங்களை எடுத்து வைக்கும்போது, இந்த திமுக அரசு உள்நோக்கத்தோடு சரியான முறையில் பிரபல மூத்த வழக்கறிஞர்களை நியமித்து முறையாக வாதாடவில்லை என்றே தெரிகிறது. வாதத்தின்போது மூத்த வழக்கறிஞர்கள், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டையும், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தையும் ஒப்பிட்டு வாதிட்டனர்.
ஜல்லிக்கட்டு போன்ற இளைஞர்களின் உடல் திறனை வெளிக்கொணரும் வீர விளையாட்டோடு, ஆன்லைன் சூதாட்டத்தை ஒப்பிட்டு மெத்தப் படித்த வழக்கறிஞர்கள் வாதிடுகையில், இதற்கு எதிரான வாதத்தினை திமுக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் உரிய முறையில் எடுத்து வைக்காதது விந்தையாக உள்ளது. விடியல் தருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, தமிழக இளைஞர்களை இருட்டுக் குகையில் தள்ளி, அவர்களது வாழ்க்கையை நாசமாக்கும் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆன்லைன் ரம்மியை நடத்தலாம் என்று தீர்ப்பு வந்த ஒரு மணி நேரத்தில் சூதாட்ட நிறுவனங்கள் தங்களின் பழைய வாடிக்கையாளர்களுக்கும், புதியவர்களுக்கும் கீழ்கண்டவாறு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்புகிறார்கள்.
நீங்கள் ஆன்லைன் ரம்மி விளையாட இலவசமாகப் பதிவு செய்துகொள்ளலாம்; உங்கள் கணக்கில் நாங்கள் 5,500 ரூபாயை இலவசமாகத் தருகிறோம். அதை வைத்து விளையாடத் தொடங்குங்கள் என்று ஆசை காட்டி செய்தி அனுப்புகிறார்கள். இதைத் தடுப்பதற்காக, உடனடியாக இந்த அரசு சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்து இடைக்காலத் தடை பெற வேண்டும். அப்போதுதான், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் பிடியில் இருந்து தமிழக இளைஞர்களைக் காப்பாற்ற முடியும். எனவே, புதிய சட்டம் கொண்டு வரும் வரை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றத்தில் உடனடியாகத் தடையாணை பெற மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த திமுக அரசை வற்புறுத்துகிறேன்” என்று அறிக்கையில் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

CM Vijay Says No Entry: அப்போ "அல்வா"தானா.! அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு "நோ என்ட்ரி"? கதவை இழுத்து மூடிய முதல்வர் விஜய்.?!
ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!