பெங்களூர் குண்டு வெடிப்பை தமிழர்களோடு தொடர்புபடுத்தி பேசிய மத்திய பாஜக அமைச்சர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் மதுரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அமைச்சரின் சர்ச்சை பேச்சு
கர்நாடாகவில் ராமேஸவரம் கபேயில் கடந்த மாதம் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை என்ஐஏ போலீசார் தேடி வருகின்றனர். இந்தநிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, “தமிழகத்தில் இருந்து வருபவர்கள் இங்கு (கர்நாடகா) வந்து பயிற்சி பெற்று இங்கு வெடிகுண்டுகளை வைக்கிறார்கள். அப்படித்தான் பெங்களூரு ஓட்டலில் வெடிகுண்டு வைக்கப்பட்டது” என்று தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டத்தை தெரிவித்தனர்.
மன்னிப்பு கேட்ட அமைச்சர்
இதனையடுத்து தனது பேச்சிற்கு மன்னிப்பு கேட்டிருந்தார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே வெளியிட்டிருந்த சமூகவலைதள பதிவில், எனது கருத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். இருந்த போதும் எனது கருத்து சிலருக்கு வலியை ஏற்படுத்தும் என்பதை உணர்கிறேன். அதற்காக நான் மன்னிப்புக் கோருகிறேன். எனது கருத்துக்கள் ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் கிருஷ்ணகிரி வனப்பகுதியில் பயிற்சி பெற்றவர்களை நோக்கி மட்டுமே இருந்தது. எனவே என் இதயத்தின் ஆழத்திலிருந்து, நான் மன்னிப்பு கேட்கிறேன். மேலும், எனது முந்தைய கருத்துக்களை திரும்பப் பெறுகிறேன் என மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கூறியுள்ளார்.
காவல்நிலையத்தில் புகார்
இதனிடையே மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தியாகராஜன் என்பவர் பாஜக அமைச்சர் மீது புகார் தெரிவித்துள்ளார். அதில், 19.03.2024 அன்று செய்தி சேனல்களை பார்த்த போது கர்நாடகா மாநிலம் மத்திய பெங்களூரு நகரத்தப்பேட்டையில் மத்திய இணை அமைச்சர் திருமதி, ஷோபா கரந்தலாஜேஅவர்கள் செய்தியாளர்களிடம் பேசும் போது தமிக மக்களை குற்றம் சாட்டும் அறிக்கையை வெளியிட்டார். மார்ச் 01, 2024 அன்று பெங்களூரில் நடந்த ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு வழக்கில் தற்போது விசாரணை நடந்து வருகின்றது. இருந்தபோதிலும் மாண்புமிகு. அமைச்சர் அவர்கள் வெடிகுண்டு தமிழகத்தை சேர்ந்தவர்களால் வைக்கப்பட்டது. என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
வழக்கு பதிவு செய்த போலீசார்
அவர் பேசியதாவது. தமிழகத்தில் இருந்து மக்கள் பயிற்சி பெற்று இங்கு வெடிகுண்டுகளை வைக்கிறார்கள். ஹோட்டலில் வெடிகுண்டு வைக்கப்பட்டது. இந்த அறிக்கை கர்நாடக மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையே பகை மற்றும் வெறுப்புணர்வுகளை வளர்க்க முயற்சிக்கின்றது. தமிழ்நாட்டு மக்களை தீவிரவாதிகள் என்று பொதுமைப்படுத்தி தமிழர்கள் மற்றும் கன்னடம் பேசும் மக்கள் என இரு சமூகத்தினரிடையே பகைமையை உருவாக்க முயல்கிறது என குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரையடுத்து மத்திய அமைச்சர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையும் படியுங்கள்
மன்னிப்பு கேட்கிறேன்... குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழர்களை விமர்சித்த பாஜக மத்திய அமைச்சர் பல்டி