தமிழ்நாடு தான் சூப்பர்.. ஒட்டுமொத்த தேசத்திற்கும் நம்பிக்கையூட்டும் தமிழ்நாடு! புள்ளிவிவரத்தை பாருங்க புரியும்

By karthikeyan VFirst Published Apr 22, 2020, 4:57 PM IST
Highlights

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்துவிட்ட நிலையில், நாட்டிற்கே நம்பிக்கையளிக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்றால் அது மிகையல்ல என்பதை நிரூபிக்கும் புள்ளிவிவரத்தை பார்ப்போம்.
 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுவரை 20 ஆயிரத்து 300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 645 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவை பொறுத்தமட்டில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது. மகாராஷ்டிராவில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் 2000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களிலும் பாதிப்பு கடுமையாக உள்ளது. 

ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பில் முன்னணியில் இருந்த கேரளாவில், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு வெகுவாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன், 300க்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 1596ஆக இருந்தாலும், 635 பேர் குணமடைந்திருப்பது, தமிழ்நாட்டு மருத்துவத்தின் தரத்தை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. 

தமிழ்நாட்டில் அதிகமானோர் குணமடைந்திருப்பது நாட்டிற்கே நம்பிக்கையளிப்பதாக அமைந்துள்ளது. பாதிப்பு எண்ணிக்கையும் கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த சில தினங்களாக தினமும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பரிசோதிக்கப்படும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கை ஒரு நாளில் 100க்கும் குறைவாகத்தான் உறுதியாகிறது. அதுமட்டுமல்லாமல், 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவை விட தமிழ்நாட்டில் அதிகமானோர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

குஜராத்தில் சுமார் 2300 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு 95 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் 251 பேரும் மத்திய பிரதேசத்தில் 76 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 

வெறும் 425 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடகாவில் கூட 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கர்நாடகாவை விட சுமார் 4 மடங்கு அதிக பாதிப்பை சந்தித்துள்ள தமிழ்நாட்டில் வெறும் 18 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். அந்தளவிற்கு தமிழ்நாட்டில் சிறப்பாக சிகிச்சையளிக்கப்பட்டு, கொரோனாவிலிருந்து மக்கள் குணப்படுத்தப்படுகின்றனர். 

எனவே ஒட்டுமொத்த தேசத்திற்கே தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாகவும் நம்பிக்கையளிக்கும் மாநிலமாகவும் திகழ்கிறது.
 

click me!