
நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற நாளை சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது டெல்லி பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் 6 மாதங்கள் கிடப்பில் போட்டுவிட்டு ஆளுநர் அரசுக்கே திருப்பி அனுப்பிவிட்டார். இதற்கு அரசியல்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து, ஆளுநரை திரும்ப பெற வேண்டும் கொந்தளித்து வருகின்றனர்.
இதுகுறித்து முக்கிய முடிவு எடுக்க தமிழக அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது, நீட் விலக்கு மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆகையால், நாளை சிறப்பு சட்டமன்றக் கூட்டம் நடைபெற உள்ளது. இதனிடையே, ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாட்கள் பயணமாக டெல்லி செல்வதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. டெல்லி பயணத்தின் நீட் தொடர்பாக குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருடன் ஆலோசனை செய்ய இருந்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவியின் டெல்லி பயணம் இன்று திடீரென ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற நாளை சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் ஈளுநரின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஆளுநர் ரவி டெல்லி செல்லக் கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.