
அதிமுக எந்த நிலையிலும் தனியாக தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கும் என்றும், ஒரு வாரமாக கட்சியினர் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவரும், திமுக நகர கழக துணை செயலாளருமான ஜான் பாஷா அதிமுகவில் இணைந்தார். அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்ற முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வரவேற்றார்.
இதனையடுத்து, கூட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம்;- நீட் தேர்வானது திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கடந்த 2010ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது. நீட் தேர்வு முறை அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்படவில்லை அது முழுக்க முழுக்க திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது. நீட் விவகாரம் குறித்து அதிமுக ஆட்சியை குறை சொல்வதற்கு திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை என்றார்.
மேலும், மத்தியில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, முதன் முதலில் 2010ஆம் ஆண்டு நீட்டுக்கான அறிவிப்பு வந்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உள்பட 80 வழக்கு தொடுக்கப்பட்டன. அதில், 2013ஆம் ஆண்டு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அந்த நீட் தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை அப்படியே விடாமல், தீர்ப்பை எதிர்த்து மீண்டும் 2013-ஆம் ஆண்டிலேயே அப்போதைய காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தது. அந்த வழக்கில் 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு நீட் தேர்வு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது.
ஆகவே, திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசே நீட்டை கொண்டு வந்தது. ஆனால், தற்போது ராகுல்காந்தி நீட்டுக்கு எதிராக பேசி வருகிறார். அதேபோன்று, திமுகவும் நீட் விவகாரத்தில் நாடகமாடி வருகிறது. தமிழகத்தில் நீட்டால் ஏற்படும் மாணவர்கள் உயிரிழப்புக்கு திமுகவே பொறுப்பாகும். குறிப்பாக, மக்களிடம் பாஜக எதிர்ப்பு மனநிலையை உருவாக்கவே, திமுக நீட் விவகாரத்தில் தொடர்ந்து நாடகமாடி வருகிறது. நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவதால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை நிம்மதியாக இருக்கிறோம் என சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி நீடித்து வந்த நிலையில், தொகுதி பங்கீட்டில் எந்த உடன்பாடு ஏற்படாததால், வரும் உள்ளாட்சி தேர்தலில் பாஜக அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிடும் என்று மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இந்நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து விலகி போட்டியிடுவதை முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.