தென் மாவட்டங்களில் மழை பாதிப்பில் தமிழக அரசு ஒருங்கிணைப்பு இல்லாததால் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள முடியவில்லையென ஆளுநர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தெரியவந்தத்தாக கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.
வெள்ள பாதிப்பு ஆளுநர் ஆலோசனை
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களை கனமழையானது புரட்டி போட்டது. பல இடங்களில் தனி தீவாக காட்சி அளிக்கிறது. இதனையடுத்து மீட்பு பணியில் தமிழக அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது. இருந்த போதும் பல இடங்களில் காட்டாற்று வெள்ளம் பாய்வதால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து மத்திய அரசின் உதவியை தமிழக அரசு நாடியுள்ளது.
undefined
இந்தநிலையில் வெள்ள பாதிப்பு தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆளுநர் அவர்கள், மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மத்திய அரசுத்துறைகள் மற்றும் பாதுகாப்புப்படைகள் மேற்கொண்டு வரும் மீட்பு நிவாரண பணிகளை சென்னை, ராஜ் பவனில் நடைபெற்ற கூட்டத்தில் ஆய்வு செய்தார்.
புறக்கணித்த தமிழக அரசு
இந்திய ராணுவம், கடற்படை, கடலோர காவல் படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை (என்.டி.ஆர்.எஃப்), ரயில்வே, பிஎஸ்என்எல், இந்திய வானிலை மையம் (ஐஎம்டி), இந்திய விமான போக்குவரத்துத்துறை ஆணையம் (ஏஏஐ) மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்பட்டபோதும் மாநில அரசின் எந்தவொரு பிரதிநிதியும் வரவில்லை.
மழை பாதிப்பால் குறிப்பாக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் நிலைமை மோசமாக உள்ளது. மத்திய அரசுத்துறைகள், அவற்றின் வளங்களை மாநில அரசு அழைத்தவுடன் பணியாற்றும் வகையில் தயாராக வைத்துள்ளன. மேலும் மாநில அரசால் கோரப்படும்போது அவை பணியில் ஈடுபட்டு வருகின்றன. மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் உத்தரவின்படியும் தேவைக்கேற்ப இயன்ற வகையில் சொந்தமாகவும் அவை மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுகின்றன.
ஒருங்கிணைப்பு இல்லை
இந்த கூட்டத்தில் பங்கேற்ற சில அமைப்புகள், போதிய ஒருங்கிணைப்பு இல்லாதது மற்றும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஒட்டுமொத்த நிலைமையை போதிய வகையில் மதிப்பிடாதது போன்ற காரணங்களால் எத்தனை வளங்கள் சரியாக தேவை மற்றும் எங்கெல்லாம் படையினரை அனுப்ப முன்னுரிமை தர வேண்டும் என்பது தெளிவற்று உள்ளதாக கவலை தெரிவித்தன. தற்போதுள்ள மோசமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு கூடுதல் வளங்களை கையிருப்பில் வைத்திருக்குமாறு அவர்களை ஆளுநர் கேட்டுக் கொண்டார்.
இதையும் படியுங்கள்