உயர்நீதிமன்றத்தில் நாளை அமைச்சர் பொன்முடி மீதான தண்டனை அறிவிக்கப்பட்டவுடன், எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்வதற்கான அறிவிப்பாணையை சட்டசபை செயலகம் வெளியிடும். இந்த அறிவிப்பாணை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும். அதன் பிறகே தகுதி இழப்பு, அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும்.
பொன்முடியின் அமைச்சர் பதவிக்கு சிக்கல்
வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்து தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக டிசம்பர் 21ம் தேதி ஆஜராகும்படி பொன்முடி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டது. எனவே அவர் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவது ஓரளவு உறுதியாகியுள்ளது. குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை (21-ந் தேதி) அவருக்கான தண்டனை விவரங்களை உயர் நீதிமன்றம் அறிவிக்கிறது. அன்று, பொன்முடிக்கு எதிராக ஏதாவது ஒரு தண்டனையை, அதாவது அபராதத்தையோ அல்லது சிறைத் தண்டனையையோ ஐகோர்ட்டு விதிக்கும்பட்சத்தில் பொன்முடி எம்.எல்.ஏ. பதவியில் நீடிக்க முடியாது. எனவே அமைச்சர் பதவியிலும் அவர் நீடிக்க முடியாது.
பதவி பறிப்பு அரசிதழ் வெளியிடப்படும்
தண்டனை விவரங்களை நீதிமன்றம் வெளியிட்ட பிறகு அந்த உத்தரவை தமிழ்நாடு சட்டசபை செயலகத்திற்கு அனுப்பி வைக்கும். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த பெங்களூர் தனிக்கோர்ட்டு நீதிபதி குன்ஹா, அவரது தீர்ப்புடன் ஜெயலலிதாவின் பதவியை பறிப்பதற்கான குறிப்பையும் இணைத்து தமிழ்நாடு சட்டசபை செயலகத்திற்கு அனுப்பி வைத்திருந்தார். தனிக் குறிப்புகளை அளிக்காவிட்டாலும், ஐகோர்ட்டின் தண்டனைத் தீர்ப்பை தமிழ்நாடு சட்டசபை செயலகம் எடுத்துக் கொண்டு, அதன் அடிப்படையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவுகளை ஆராயும். அதில் கூறப்பட்டுள்ளபடி, எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்வதற்கான அறிவிப்பாணையை சட்டசபை செயலகம் வெளியிடும். இந்த அறிவிப்பாணை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும். அதன் பிறகே தகுதி இழப்பு, அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும்.
இதற்கு முன் பதவியை இழந்தத்து யார்.?
அதன் பின்னர், பொன்முடி தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்த சட்டமன்ற தொகுதியான திருக்கோயிலூர் காலியானதாக இந்திய தேர்தல் கமிஷனுக்கு சட்டசபை செயலகம் கருத்துருவை அனுப்பி வைக்கும். அதை ஏற்றுக் கொண்டு அந்த தொகுதிக்கான இடைத் தேர்தலை 6 மாதங்களுக்குள் தேர்தல் கமிஷன் நடத்தும். தற்போதுள்ள சூழ்நிலையில், இன்னும் ஒரு சில மாதங்களில் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலுடன் இணைத்து இந்த இடைத் தேர்தலையும் தேர்தல் கமிஷன் நடத்த வாய்ப்புள்ளது. அமைச்சர் பதவியில் இருக்கும்போதே தகுதியிழப்பை சந்திக்கும் மூன்றாவது எம்..எல்.ஏ.யாக பொன்முடி இருப்பாரா? என்ற சூழ்நிலை எழுந்துள்ளது. இதற்கு முன்னதாக சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவும், கலவர வழக்கில் அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியும் பதவியை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்