தமிழகத்தில் கொரோனாவுக்கு முடிவுரை எழுதிய எடப்பாடி அரசு..! விரைவில் கொரோனாவிலிருந்து விடிவுகாலம்

By karthikeyan VFirst Published Jul 23, 2020, 9:44 PM IST
Highlights

தமிழ்நாட்டில் கொரோனாவை விரைந்து கட்டுப்படுத்தும் நோக்கில், குழு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
 

தமிழ்நாட்டில் தினமும் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டிவருகிறது. இந்தியாவை பொறுத்தமட்டில் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தான் கொரோனா பாதிப்பு மிகத்தீவிரமாக உள்ளது. தமிழ்நாட்டில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 6472 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, தமிழ்நாட்டின் மொத்த பாதிப்பு ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 963ஆக உள்ளது. 

தமிழ்நாட்டில் அதிகமான பாதிப்பு கண்டறியப்படுவதற்கு காரணம், அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்வதுதான். மகாராஷ்டிராவை விட பாதிப்பு குறைவாக உள்ள தமிழ்நாட்டில், மகாராஷ்டிராவை விட அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இன்று அதிகபட்சமாக 62,116 பரிசோதனைகள் செய்யப்பட்டன. நேற்றும் அறுபதாயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டன. 

கொரோனாவை கட்டுப்படுத்த, அதிகமான பரிசோதனைகளை பரவலாக மேற்கொண்டு, அதிகமான பாதிப்புகளை விரைவில் கண்டறிவது தான். அதிகமான பாதிப்புகளை கண்டறிவதன் மூலம் தான், கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். அந்தவகையில், தமிழ்நாடு அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை திறம்பட எடுத்துவருகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுவதுடன், குழு பரிசோதனை என்ற முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

திருச்சி, கோவை, ஈரோடு, திருநெல்வேலி, புதுக்கோட்டை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் குழு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 

கடந்த 2 வாரமாக சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துவிட்ட நிலையில், ஒருசில வாரங்களாக தொடர்ச்சியாக மற்ற பிற மாவட்டங்களில் நோய்த் தொற்று தீவிரமடைந்து வருகிறது. அதேவேளையில், ஏற்கெனவே பாதிப்பு அதிகமாக இருந்த சில பகுதிகளில் அதன் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. 

அறிகுறிகள் உள்ளவா்கள், பாதிப்பு உறுதி செய்யப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களுக்கு மட்டும்தான் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறதே தவிர, பொதுவாக அனைவருக்கும் பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. அதனால் எந்தெந்த இடங்களில் கொரோனா பாதிப்பு பரவலாக உள்ளது, எங்கெங்கு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை துல்லியமாக அறிய முடியாத சூழல் உள்ளது. எனவே அதை கருத்தில்கொண்டு, தமிழகத்தில் பாதிப்பு விகிதம் குறைந்துவரும் பகுதிகளில் குழு பரிசோதனைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

குழு பரிசோதனை என்பது, ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசிப்பவர்களை வயது வாரியாக குழுக்களாக பிரித்து ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒரு சிலருக்கு பரிசோதனை செய்யப்படவுள்ளது. அந்த முடிவுகளை கொண்டு குறிப்பிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு பரவல் குறித்த தெளிவான முடிவுக்கு வரமுடியும்.

அதன்படி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, திருச்சி, விழுப்புரம், திருவாரூா், தென்காசி, அரியலூா், நாகப்பட்டினம்,பெரம்பலூா், சேலம், கன்னியாகுமரி, திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, கோவை, நீலகிரி, தஞ்சாவூா், தருமபுரி, கரூா், திருப்பூா், நாமக்கல், ஈரோடு ஆகிய பகுதிகளில் குழு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்விளைவாகத்தான் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இனி வரும் நாட்களில் இந்த பரிசோதனை எண்ணிக்கைகள் அதிகரிக்கப்படும். இதன்மூலம் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் கொரோனா பாதிப்பு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

click me!