கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகத்தை கலைப்பது தொடர்பான வழக்கு... உயர்நீதிமன்றத்தில் தமிழக கொடுத்த உறுதி..!

By vinoth kumarFirst Published Jul 5, 2021, 6:44 PM IST
Highlights

கூட்டுறவு சங்கங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை மிரட்டும் வகையில் அமைச்சரின் பேட்டி அமைந்துள்ளதாகவும், 2018 ம் ஆண்டு நடந்த கூட்டுறவு சங்க தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின்  பதவிக்காலம் 2023 ம் ஆண்டு வரை உள்ள நிலையில், தங்களின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும்  அந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகத்தை கலைக்கப் போவதில்லை என்ற தமிழக அரசின் உத்தரவாதத்தை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், சங்கங்களை கலைக்க தடை கோரிய வழக்குகளை முடித்து வைக்கப்பட்டுள்ளது. 

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் தற்போதைய நிர்வாகத்தை கலைத்து புதிதாக தேர்தல் நடத்துவது குறித்து அரசு கொள்கை முடிவு எடுக்க உள்ளதாக  தெரிவித்திருந்தார். கூட்டுறவு சங்கங்களை கலைக்க எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்டம், பட்லூர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் இளங்கோ, சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் லோக முருகன், தர்மபுரி மாவட்டம், நரிப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் வாசுகி சிற்றரசு  உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள்  சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

கூட்டுறவு சங்கங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை மிரட்டும் வகையில் அமைச்சரின் பேட்டி அமைந்துள்ளதாகவும், 2018 ம் ஆண்டு நடந்த கூட்டுறவு சங்க தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின்  பதவிக்காலம் 2023 ம் ஆண்டு வரை உள்ள நிலையில், தங்களின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும்  அந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணகுமார் முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தற்போதைய கூட்டுறவு சங்க நிர்வாகத்தை கலைக்கப் போவதில்லை என்றும், முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருந்தால், அத்தகைய சங்கங்கள் மீது மட்டும் சட்டத்திற்கு உட்பட்டு  முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதை பதிவு செய்த  நீதிபதி கிருஷ்ணகுமார் வழக்கை முடித்து  உத்தரவிட்டார். அதே சமயம், நடவடிக்கைக்கு உள்ளாகும்  கூட்டுறவு சங்கங்கள், சட்டப்பூர்வ நிவாரணம் தேடிக்கொள்ள அனுமதியளித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

click me!